திண்டுக்கல்லில் கிராம நிர்வாக அலுவலர்கள் 250க்கும் மேற்பட்டோர் தங்களது 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கரூர் புறவழிச்சாலையில் இருந்தது பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தப்பட்டது.
இன்று 9 வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தத்தை கண்டுகொள்ளாத அரசைக் கண்டித்து திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மாவட்ட தலைவர் ராஜரத்தினம் தலைமையில் பேரணி நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் பணியை தொழில்நுட்ப பணியாக வரையறை செய்ய வேண்டும் என்பமை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் 9 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் 12600 கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளனர். பிறப்பிலிருந்து மனிதன் இறக்கும் வரை இடைப்பட்ட வாழ்வில் அவர்களுக்கு தேவையான அனைத்து சான்றிதழ்களையும் வழங்குவது அவர்களின் முக்கியப் பணி, இவற்றில் 50% பணிகளை தமிழக அரசு ஏற்கனவே கணினி மூலம் ஆன்லைன் பணிகளாக மாற்றிவிட்டது. ஆனால் கிராம நிர்வாக அலுவலர் பணியை மட்டும் தொழில்நுட்ப பணியாக வரையறை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது. அதேபோல் பதவி உயர்வில் 30% மட்டுமே எடுத்துக்கொள்ளப்படுவதால் 6 ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு 15 ஆண்டுகளுக்கு பிறகு கிடைக்கும் சூழல் உள்ளது. கிராம நிர்வாக அலுவலர்களில் 90% பேர் பட்டதாரிகளாக இருப்பதாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வு தாமதமாவதாலும், கிரேட்-1, கிரேட்-2 என பணியை பணிபுரியும் காலத்தைப் பொறுத்து வரையறை செய்து அதற்கான ஊதியம் வழங்க வேண்டும், மேலும் சொந்த மாவட்டங்களைவிட்டு மற்ற மாவட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறுவிதமான போராட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அரசு இதுவரை அழைத்துப் பேசாத காரணத்தால் 9 வது நாளாக மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், திண்டுக்கல்
You must be logged in to post a comment.