தூத்துக்குடி போலீசார் விசாரணை வளையத்தில் அமெரிக்க தொலைக்காட்சி நிருபர்…

ஸ்டெர்லைட்க்கு எதிராகப் போராடிய கிராமங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தது ஏன் என அமெரிக்காவைச் தொலைக்காட்சி நிருபர் மார்க் ஷியலா என்பவரிடம் தூத்துக்குடி போலீஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிலரது துணையுடன் ஸ்டெர்லைட்ஐ சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில்  தங்கி உள்ளார். இவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போரட்டம் நடைபெற்று வந்த கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களை சந்தித்துப் பேசி வருகிறார்’ என உளவுத்துறை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் யார், எங்கிருந்து வந்துள்ளார் என விசாரித்த போலீசார், தூத்துக்குடி நகரில் அவர் தங்கியுள்ள தனியார் ஹோட்டலுக்குச் சென்ற உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவு போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்

விசாரணையில் அவர் பெயர் மார்க் ஷியாலா என்பதும், அவர் அமெரிக்காவில் இருந்து வந்திருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தான் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பத்திரிக்கையின் செய்தியாளர் எனவும், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான மக்கள் போராட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க வந்ததாகவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் அவரை, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற பகுதிகளுக்கு அழைத்துச் சென்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து பிரின்ஸிடம் கூறுகையில், ”ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய கிராமங்களுக்குச் செல்ல வேண்டும் என அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் ஷியாலா என்ற பத்திரிகையாளர், எங்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாத்திமாபாபுவை சந்தித்துப் பேசினார். அவருக்கு தமிழ் மொழி தெரியாது என்பதால், மொழிபெயர்ப்பு செய்வதற்காக அவருடன் நானும் சென்றேன். சில கிராமங்களுச் சென்றோம். அங்குள்ள மக்களிடம் உரையாடினார். நான் அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துச் சொன்னேன். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களையும் சந்தித்தோம். இதுதான் நடந்தது. ஆனால், போலீஸார் என் வீட்டிற்கு வந்து என்னிடம் விசாரித்தனர். நடந்ததைச்  சொன்னேன்.

காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை செய்ய வேண்டும் என்றனர். உடனே, அவர்களுடன் போனேன். முதலில் தெற்கு காவல் நிலையத்திற்கு போக வேண்டும். என்றனர். பாதி வழியிலேயே சிப்காட் காவல் நிலையத்திற்கு போவோம் என்றனர். மீண்டும் தெற்கு காவல் நிலையம் என்றனர். இறுதியாக தெர்மல் நகர் காவல் நிலையம் எனச் சொல்லி இரண்டு மணி நேரம் அழைக்கழித்து பின்பு விடுவித்தார்கள்” என்றார்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளார் பாத்திமாபாபுவிடம் பேசினோம், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருபவர் மீது தினமும் ஏதாவது ஒரு சம்மன் அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். ஒரு செய்தியாளருக்கு உதவி செய்ததால் காவல்துறை இப்படி ஒரு அடக்குமுறையைக் கையாளுகிறது. எந்த அடக்குமுறையைக் கையாண்டாலும் ஆலையைத் திறக்க விடமாட்டோம்” என்றார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மார்க் கார்டியன்  மற்றும் அல்ஜசீரா ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் என தெரிய வருகிறது, தற்போது எச்.பி.ஓ ஆங்கிலத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவரிமிருந்த ஆவனங்களை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி