Home செய்திகள் கோவில்பட்டி எம்.எம். பள்ளியில் மாணவர்களின் பிறந்த நாளில் தபால் தலை : அசத்தும் அஞ்சல் துறை..

கோவில்பட்டி எம்.எம். பள்ளியில் மாணவர்களின் பிறந்த நாளில் தபால் தலை : அசத்தும் அஞ்சல் துறை..

by ஆசிரியர்

கோவில்பட்டி எம்.எம். வித்யாஷ்ரம் பள்ளியில் மாணவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘என் தபால் தலை’ என்ற திட்டத்தில், அவர்களின் புகைப்படம் கொண்ட தபால் தலை வெளியீடும் விழா நடந்தது. நிர்வாகக்குழு உறுப்பினர் சு.கண்ணையா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பி.முத்துலட்சுமி தலைமை வகித்தார்.

கோவில்பட்டி அஞ்சலக கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஆர்.சாந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, நேற்று பிறந்த நாள் கொண்டாடிய யு.கே.ஜி. மாணவி எஸ்.ஜூவிதா, 4-ம் வகுப்பு மாணவர் எம்.அரவிந்த் ஆகியோர் புகைப்படங்களை கொண்ட தபால் தலைகளை வெளியிட்டார். இதனை மாணவர்களின் பெற்றோர் பெற்றுக்கொண்டனர்.

விழாவில், உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் யு.வசந்தா சிந்துதேவி, பி.ஆர்.பி.வி.கண்ணன், வணிக வளர்ச்சி அதிகாரி வி.ரெங்கசாமி, பள்ளி நிர்வாகக்குழுகள் மு.கந்தன், மு.கலாநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து தபால் தலை கண்காட்சி நடத்தப்பட்டது.

இதுகுறித்து முதுநிலை கண்காணிப்பாளர் ஆர்.சாந்தகுமார் கூறும்போது, மக்களிடையே அதிகம் நெருங்கி செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை அஞ்சல்த்துறை செயல்படுத்திக் கொண்டுள்ளது. தற்போது தபால் குறைந்துவிட்டாலும், மற்ற சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு, ‘என் தபால் தலை’, அஞ்சலக வங்கி, தங்க நாணயம் விற்பனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலமாக தன்னிகரற்ற சேவையை செய்து வருகிறது.

என் தபால் தலை திட்டத்தில் ஒரு அட்டையில் 12 தபால் தலைகள் இருக்கும். இதற்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மற்ற தபால் தலைகள் போன்று பயன்படுத்தலாம். பொதுவாக தேச தலைவர்கள் படம் தான் தபால் தலைகளில் பொறிக்கப்படும். ஆனால், இங்கு பள்ளி குழந்தைகளின் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களும் நாளை தேசம் காக்கும் தலைவர்களாக உருவெடுக்க வேண்டும் என வலுவான கருத்தை அவர்களது மனத்தில் ஏற்படுத்த இது உந்துதலாக இருக்கும், என்றார் அவர்.

பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, ஏற்கனவே இந்தாண்டு பள்ளியின் மாத நாட்காட்டியில் நாங்கள் மாணவ, மாணவியர்களின் பிறந்த நாள் தேதியில் அவர்களது புகைப்படங்கள் இடம்பெற செய்தோம். இதன் அடுத்த கட்டமாக தான் மாணவர்களின் பிறந்த நாளில் அவர்களது புகைப்படம் பொறித்த தபால் தலை வெளியிடுவது. இதுவும் அவர்களை ஒரு விதத்தில் ஊக்கப்படுத்துவதற்கு தான், என்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!