கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 16வது பட்டமளிப்பு விழா…

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 03.03.2019 அன்று காலை 10.00 மணியளவில் 16-வது பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைக் கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் தாளாளர் முகம்மது யூசுஃப் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இயக்குநர் ஹாமீது இப்ராகிம் அவர்கள் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியினைக் கல்லூரி முதல்வர் ரஜபுதீன் வரவேற்புரை நிகழ்த்தி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார். அவர் பேசுகையில் “மாணவர்கள் நிச்சயமாக தங்களது பெற்றோர்களை மிகச் சிறந்த முறையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மேலும், அறிவுக் கண் திறந்த ஆசிரியர்களை மதித்து போற்ற வேண்டும். உலக அரங்கில் இந்தியா தொழில் நுட்பத்தில் ஒரு மேலோங்கிய நாடாக திகழ்கிறது. அதிலும் இந்திய அளவில் சமுதாய முன்னேற்றத்தில் தமிழ் சமுதாயம் மிகத் தொன்மை வாய்ந்ததாக இருக்கிறது. இதற்கு கீழடி அகழ்வாய்ச்சியே மிக முக்கிய சாட்சியாகும். இந்த தொன்மையான நாகரீகம் சங்ககால இலக்கியங்களின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். சங்ககால இலக்கிய நூலான திருக்குறள் ரஷ்ய நாட்டில் டங்ஸ்டன் பேழையில் பொறிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. மாணவ மாணவியர் தமிழ்ச் சமுதாயத் தொன்மையினைப் போற்றி பாதுகாக்க வேண்டும். மேலும்ர பட்டம் பெறும் பட்டதாரிகள் தங்களுக்கான இலட்சியம் வகுத்துக் கொண்டு அதற்காக அயராது உழைக்க வேண்டும். அது தமது இலட்சியமாக இருந்தாலும் நாட்டின் இலட்சியமாக இருந்தாலும் அதன் இலக்கை அடையும் வரை உழைக்க  வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் முகம்மது சதக் பொறியியல் கல்லூரி முதல்வர் அப்பாஸ் முகைதீன், நெறியாளர் . முகம்மது ஜஹபர்ரூபவ் முகம்மது சதக் தொழில் நுட்பக் கல்லூரி முதல்வர் அலாவுதீன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் .மு.ஹசன்அலி இராமநாதபுரம் சைடெக் கல்வி நிறுவன முதல்வர் ரியாஸ் அகமது, இராமநாதபுரம் முகம்மது சதக் தஸ்தகீர் ஆசிரியர் பயிற்சி கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், முகம்மது சதக் கபீர் பப்ளிக் பள்ளி (CBSE) முதல்வர் ஆலியா மற்றும் இராமநாதபுரம் முகம்மது சதக் ஹமீது கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி முதல்வர் நாதிரா பானு கமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அளவில் தரவரிசை பெற்ற 12 மாணவ மாணவியருக்கு பதக்கங்களும் பட்டங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் 43 முதுகலை மாணவ மாணவியருக்கும் 269 இளங்கலை மாணவ, மாணவியருக்கும் பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பெற்றொர்களும் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அனைத்து பேராசிரியர்களும் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் ஏற்பாடு செய்திருந்தனர்.  இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளை செயலர் சர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.