Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள் விழா ..

இராமநாதபுரத்தில் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி பிறந்த நாள் விழா ..

by ஆசிரியர்

சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் 259-வது பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன் அமைந்துள்ள மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் இன்று (30/3/19) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி 30.3.1760 ல் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே இராமநாதபுரம் சீமையில் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டு ஏராளமான அறப்பணிகள், தமிழ் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டார். ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோயில் மூன்றாம் பிரகாரத்தை  கட்டி முடித்தார். அன்றைய காலகட்டத்தில் ராமநாதபுரம் சீமையில் அதிகளவிலான கைத்தறி நெசவுகளை நிறுவி, ஆங்கிலேயர்களிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் துணிகளை தவிர்க்க மக்களை ஊக்கப்படுத்தியவர். ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து கப்பம் கட்டவேண்டுமென்ற ஆணையை ஏற்க மறுத்து கப்பம் கட்ட மறுத்தார்.

ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள், வணிகங்களை எதிர்த்து போராடிய மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி அன்றைய ஆங்கிலேய அரசு கட்டுப்படுத்த எண்ணி 12 வயது நிரம்பிய முத்துராமலிங்க சேதுபதியை அக்கால கட்டத்தில் ஆங்கிலேயர் அரசு ராமநாதபுரம் கோட்டையை சுற்றி வளைத்து போரிட்டது.  இப்போரில் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி கைது செய்யப்பட்டு திருச்சியில் உள்ள கோட்டையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து 10 ஆண்டு சிறையில் கழித்தார். 1782ஆம் ஆண்டு பல்வேறு நிபந்தனைகளுடன் மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி விடுதலை செய்யப்பட்டு

ராமநாதபுரம் சீமையில் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றார். சிறிது காலம் பொறுமையாக இருந்த மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தனது உள்ளத்தில் ஊறிய சுதேசி சிந்தனையால் ஆங்கிலேயர்களை மீண்டும் எதிர்த்தார். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி  முடக்கினார்.  இதனால் 1795-ஆம் ஆண்டு வெள்ளையர், நவாப்புகளின் கூட்டுப்படை மன்னர் ரிபெல்  முத்துராமலிங்க சேதுபதியை மீண்டும் கைது செய்து திருச்சி கோட்டை சிறையில் அடைத்தது. திருச்சி சிறையில் சில நாட்கள், அதன்பின் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது வாழ்நாளை இறுதி வரை இந்திய விடுதலைக்காக போராடி 23.01.1809 ல் சென்னை ஜார்ஜ் கோட்டையில் உயிர் நீத்தார். மன்னர்  ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி இந்திய விடுதலைக்காக செய்த தியாகங்களை கௌரவிக்கும் விதமாக தமிழக அரசு அவரது பிறந்த நாளான மார்ச் 30-ஆம் நாளை அரசு விழாவாக கொண்டாட உத்தரவிட்டுள்ளது.

அதன்படி மன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதியின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி தியாகங்களை கவுரவிக்கும் வகையில் 259-வது பிறந்த நாளான இன்று (30/3/19) ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் முன் அமைந்துள்ள ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ம.கயிலைச்செல்வம் (செய்தி), கேசவமூர்த்தி (விளம்பரம்) உட்பட அரசு அலுவலர்கள், மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி வாரிசுதாரர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!