
திருவண்ணாமலை நகருக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்.அழகிரி தனியார் ஹோட்டலில் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் வெளிப்படையாகக் கூறிவிட்டாா்.ரஜினிக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அரசியல் கட்சியைத் தொடங்கச் சொல்லி அழுத்தம் கொடுத்து, அவரது உடலையும், மனதையும் பாஜக கெடுத்துவிட்டது.ரஜினியை கட்சி தொடங்க வைத்து திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பிரித்துவிட்டால், அதிமுகவை எளிதில் வெற்றி பெறச் செய்துவிடலாம் என்று பாஜக கருதியது. பாஜகவின் இந்த முயற்சி பொய்த்துவிட்டது. தங்களின் சுயமரியாதையை இழந்து அதிமுகவினா் நிற்கும் நிலை உள்ளது.
திமுக கூட்டணி கொள்கை ரீதியானது. மு.க.ஸ்டாலினை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டுள்ளனா். எனவே, ரஜினி கட்சி தொடங்கி இருந்தால்கூட திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.திமுக, அதிமுக கூட்டணிகள் உறுதியாகி விட்ட நிலையில், நடிகா் கமல்ஹாசன் 3-ஆவது அணியை அமைப்போம் என்று சொல்வது எப்படி சாத்தியம்.ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் விடுதலையை திமுக வரவேற்பது அவா்களுடைய கொள்கை.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 30 நாள்களுக்கும் மேலாக தில்லியில் விவசாயிகள் அகிம்சை முறையில் போராடி வருகின்றனா். உலகிலேயே இத்தனை நாள்கள் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டமாகத்தான் இருக்க முடியும்.
புயல், வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது வாக்குகளுக்காக ஏழை மக்களின் மனதை மாற்றும் செயல்.கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணத்தின் விளிம்புக்கே நான் சென்று வந்துவிட்டேன் என்றாா் கே.எஸ். அழகிரி.பேட்டியின்போது திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செங்கம் ஜி.குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.செந்தமிழ் அரசு, எம்.கே. காமராஜ், கே.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
You must be logged in to post a comment.