நெல்லையில் பாண்டியர் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் கோரிக்கை..

திருநெல்வேலியில் சேதமடைந்து வரும் பாண்டியர்களின் கோட்டையை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும் என்று நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி விழிப்புணர்வு இயக்கத்தின் தலைவர் முனைவர் கோ. கணபதி சுப்பிரமணியன் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:திருநெல்வேலியில் 8-ஆம் நூற்றாண்டில் பாண்டியர் ஆண்ட காலத்தில் பாளையங்கோட்டையில் கோட்டை அமைத்து ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அதன்பின் பாளையக்காரர்களும், பின்னர் ஆங்கிலேயர்களும் இந்த கோட்டையை நிர்வாக அலுவலகமாகவும், அதன் ஒரு பகுதியை சிறையாகவும் பயன்படுத்தி வந்துள்ளனர். இங்கு தான் ஊமைத்துரையை சிறை வைத்துள்ளனர். இப்படி பல வரலாறு கொண்ட கோட்டையாக இது உள்ளது. அந்த கால பாண்டியர்களின் ஆட்சியின் அடையாளமாக இன்றைய மேடை போலீஸ் ஸ்டேஷன் பகுதி தான் அடையாளமாக உள்ளது.மற்றொரு அடையாளம் பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை பகுதி, மற்றொரு பகுதி பாளையங்கோட்டையில் இருக்கும் அருங்காட்சியகமாகும்.ஆனால் எல்லாருக்கும் தெரிந்த கோட்டை பகுதியாக இருப்பது மேடை போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ள பகுதி மட்டுமே. இந்த கோட்டை தற்போது சிதிலமடைந்து மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி மேடை போலீஸ் ஸ்டேஷன் பகுதியான, பாண்டியர்களின் கோட்டையின் பழமை மாறாமல் புனரமைத்து நாளைய சந்ததியினருக்கு இந்த தொன்மை அடையாளத்தை பாதுகாத்து வழங்க வேண்டும் என்றும், திருநெல்வேலி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பகுதியை புனரமைத்து பள்ளி மாணவ மாணவியர் வந்து பார்வையிடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்