தூத்துக்குடியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த கடல் வாழ் உயிரின கண்காட்சியை ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ் தூத்துக்குடி கடற்கரை சாலையில் இயங்கி வரும் மத்திய கடல் மீன் வள ஆராய்ச்சி நிலையம் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையத்தை ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வருடம் அந்த நிறுவனத்தின் 72 ஆவது நிறுவன தினம் நேற்று (05.02.2019 ) கொண்டாடப்பட்டதைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகள், மீன் வள ஆராய்ச்சி, ஆகியவை காண்பிக்கப்பட்டது.
முதன்மை விஞ்ஞானி மனோஜ்குமார் மாணவ, மாணவிகளுக்கு கடல் வாழ் உயிரினங்கள் குறித்து விளக்கம் அளித்தார். கண்காட்சியில் திசு வளர்ப்பு முறையில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட கடல் முத்துகள் பற்றியும், சிங்கி இறால், நண்டுகள், சுறா வகை மீன்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. மேலும் அலங்கார மீன்கள், ஆக்டோபஸ் உள்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை நேரில் பார்த்து மாணவர்கள் குதுகலித்தனர்.
கண்காட்சியில் மீன்கள் மட்டுமல்லாமல் மன்னார் வளைகுடா பகுதியில் உள்ள தீவிகள் பற்றியும் அந்த தீவு பகுதியில் உள்ள பவள பாறைகள், கடல் பாசி, கடல் விசிறி, சங்கு இனங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
You must be logged in to post a comment.