Home செய்திகள் வெல்லட்டும் மதச்சார்பின்மை.! – டிசம்பரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாபெரும் மாநாடு..

வெல்லட்டும் மதச்சார்பின்மை.! – டிசம்பரில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாபெரும் மாநாடு..

by ஆசிரியர்

நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிநாதங்களில் ஒன்று மதச்சார்பின்மையாகும். அரசின் சேவைகள், குடிமக்களுக்கான உரிமைகளில் மக்களுக்கு மத்தியில் எந்த விதத்திலும் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பின்மையை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், துரதிஷ்டவசமாக தற்போதைய ஆட்சியில் நாட்டின் உன்னதமான மதச்சார்பின்மை மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பல்வேறு வழிகளில் மதச்சார்பின்மைக்கு எதிராக ஆபத்துக்கள் அதிகரித்துள்ளன. அரசியலமைப்பு சாசனத்திலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் வார்த்தைகளை நீக்கும் நடவடிக்கைகளை ஆளும் ஒன்றிய பாஜக அரசே செய்துவருகின்றது.

மதச்சார்பின்மை மீதான மறைமுகத் தாக்குதல்கள் அரசின் ஆதரவுடன் இப்போது நேரடியாகவும் வெளிப்படையாகவும் மாறிவிட்டன. அரசியல் சாசனம் உறுதிப்படுத்தியுள்ள இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற, ஜனநாயகத் தன்மையை வீழ்த்திட, அதன் மீது தாக்குதல் தொடுப்பதும், சிறுமைப்படுத்துவதும், இறுதியில் அதனை ஒழிப்பதுமான பாசிச திட்டங்களை நிறைவேற்றும் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன.

ஒருபுறம் மதச்சார்பின்மைக்கு எதிராக அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் நடந்துவரும் வேளையில், மறுபுறம் மதவாதம் அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக மாறிக்கொண்டிருக்கின்றது. மக்களுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. மதவெறுப்புகள் அங்கிங்கெனாதபடி நாட்டின் அனைத்து இடங்களிலும் நீக்கமற நிறைந்து காணப்படுகின்றன.

இவையெல்லாவற்றிற்கும் தீர்வாக, அரசியலமைப்பை, அதன் உன்னத உயர்ந்த கோட்பாடுகளை உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

ஆகவே, நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பை காக்கவும், நாட்டின் ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மையின் லட்சியங்களை நிலைநிறுத்தவும் ‘வெல்லட்டும் மதச்சார்பின்மை!’ என்ற முழக்கத்தோடு எதிர்வரும் டிசம்பர் மாதம் மதுரை மாநகரில் மாபெரும் ‘மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாடு’ நடத்த எஸ்.டி.பி.ஐ. கட்சி திட்டமிட்டுள்ளது.

நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உறுதிசெய்துள்ள மதச்சார்பின்மையை காக்கும் நோக்கில் நடத்தப்படும் இந்த மாநாட்டில், அனைத்து மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

*என்.ஐ.ஏ.வின் அராஜக நடவடிக்கை கண்டிக்கத்தக்கது*

கோவையில் உக்கடம் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக விசாரணை செய்துவரும் என்.ஐ.ஏ., அவ்வப்போது சோதனை என்ற பெயரில் முஸ்லீம் இளைஞர்களை குறிவைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. அதன் உச்சகட்டமாக கைது செய்யப்பட்டவர்களில் சிலர் முன்பு அவர்கள் படித்த அரபு பாடசாலையில் படித்தவர்கள் மற்றும் அங்கு படிக்கும் மாணவர்களை குற்றவாளிகள் போல பாவித்து அனைவரது வீடுகளிலும் அத்துமீறி சோதனைகள் செய்வதும், அவர்களின் வீடுகளில் அதிகாலையில் சென்று நெருக்கடிகள் கொடுப்பதும், விசாரணை என்ற பெயரில் அழைக்கழிக்கப்பது என அராஜக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. என்.ஐ.ஏ.வின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை வீரியமாக முன்னெடுப்பதில் மதரஸாக்கள் பெரும் பங்காற்றின என்பது வரலாறு. ஆனால், இன்று அத்தகைய வரலாற்றின் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் மதரசாவில் தீவிரவாத பயிற்சி என்கிற ஆதாரமற்ற குற்றச்சாட்டின் பேரில் என்.ஐ.ஏ. சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மதரஸாக்கள் செயல்படும் நிலையில், எந்த ஒரு மதரஸா மீதும் இத்தகைய பயங்கரவாத குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு கூட இல்லாத நிலையில், தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சி ஊக்குவிப்பு என்கிற குற்றச்சாட்டு நிச்சயமாக அது திட்டமிட்ட அவதூறு நடவடிக்கையாகவே இருக்க முடியும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கல்வி நிறுவனங்கள் மீதான இத்தகைய வெறுப்புத் தாக்குல் வன்மையான கண்டனத்திற்குரியது.

*அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை:*

தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட விசக்காய்ச்சல்கள் வேகமாக பரவிவருவது தொடர்பான செய்திகளும், தீவிர காய்ச்சல் காரணமாக ஒரு சில மரணங்களும் தமிழகத்தில் நிகழ்ந்துள்ளதாக வெளியான செய்திகளும் மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி வருகிறது.

தற்போது நிலவும் காலநிலை மாற்றம் காரணமாக கொசுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளன. தேங்கி நிற்கும் நீர் மற்றும் குப்பைகளால் டெங்கு பரப்பும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. ஆகவே, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் டெங்குவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையை முடுக்கி விட வேண்டும்.

டெங்கு உள்ளிட்ட விசக் காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி, டெங்குவை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!