தொண்டியில் மாயமான பள்ளி மாணவிகள் 3 பேர் திருச்சியில் மீட்பு..

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 9ம் வகுப்பு மாணவிகள் ஆர்த்தி 15, அஸ்வினி 15, கனிகா 14 ஆகியோர் நேற்று காலை வீட்டில் இருந்து பள்ளிக்கு கிளம்பினர். பள்ளிக்கு இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. பின்னர் விசாரணையில் அவர்கள் 3 பேரும் பள்ளிக்கு செல்லவில்லை என தெரிந்தது. மூவரின் பெற்றோர் புகாரில் தொண்டி போலீசார் வழக்கு பதிந்து இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தீவிரமாக தேடி வந்தனர். மாணவிகள் மாயமான சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியது.

தொண்டி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் திருச்சி ரயில் நிலையத்தில் 3 மாணவிகளையும் ரயில்வே போலீசார் மீட்டனர். விசாரணையில் மாணவிகள் மூவரின் வீட்டின் பொருளாதார சூழ் நிலையால் வேலை பார்த்து வீட்டுக்கு பணம் அனுப்பி பெற்றோரின் கடன் சுமையை குறைக்க வேண்டும் என மாணவிகள் முடிவு செய்து தொண்டியில் இருந்து ராமநாதபுரம் வந்தனர். ரயிலில் திருச்சி சென்று ஸ்டேஷனில் இறங்கிய போது ரயில்வே போலீசாரிடம் சிக்கியதாக மாணவிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட மாணவிகள் திருச்சி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.