அரியாசனம் ஏற்றி சரியாசனம் செய்வது கல்வி: காவல் ஓய்வு அதிகாரி பேச்சு..

இராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 14 ஆம் ஆண்டு விழா மற்றும் மழலையருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருச்சி ப்ரோவின்சியல் சுப்பீரியர் ஏஞ்சலோ ப்ரோவின்ஸ் டி. அந்தோணி ராஜ் தலைமை வகித்தார்.

மழலையர் 130 பேருக்கு பட்டம், கல்வியில் சிறந்த, விளையாட்டு, கலை போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியருக்கு காவல் கண்காணிப்பாளர் (ஓய்வு), தன்னம்பிக்கை பேச்சாளர் அ.கலியமூர்த்தி வழங்கினார். அவர் பேசுகையில், மாணவர்களுக்கு ஒழுக்கமான கல்வியை கற்றுக் கொடுப்பவரே ஆசிரியர்கள் . கல்விப் பணி என்பது ஊதியத்திற்கான பணியல்ல. சமூக மாற்றத்திற்கான பணி. பலர் தூங்கிய நேரத்தில் விழித்து படித்த சிலர் தான் சாதனை மாணவர்களாக சமூகத்தில் வலம் வர முடிகிறது. நீட் தேர்வு, பொறியியல் நுழைவு தேர்வுகளில் தேசிய அளவில் முதல் மதிப்பெண் அள்ளிய கல்பனா குமாரி, அபினவ் கோயல் ஆகியோர் 9 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு தேர்வுகள் முடியும் செல்போன் பயன்பாடு, டிவி., நிகழ்ச்சிகளை தவிர்த்ததால் சாதனை மகுடம் சூட்ட முடிந்தது என்றனர். செல்வந்தர்கள் ‘லட்சுமி’யால் ஏழைகள்’ சரஸ்வதி’ யால் ஆளுமை செய்கின்றனர். எக்குடியில் பிறந்தவரானாலும், அக்குடியில் பயின்றவரை சமூகம் உயர்ந்த இடத்தில் அரியாசனம் தந்து சரியாசனம் செய்ய வைக்கிறது. நற்பண்புகளே நம் செதுக்கும் உளி. முகநூல் நட்பால் அப்பெண்கள் ஏராளமானோர் ஏமாற்றப்படுகின்றனர், என்றார்.

பள்ளி தாளாளர் பி.சதானந்தம், முதல்வர் ஜெ.ரேமண்ட், பங்கு தந்தை அருள் ஆனந்த், சட்ட ஆலோசகர் அதிசய பாபு, பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதி வி.அழகர்சாமி மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர் கலந்து கொண்டனர். மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.