Home செய்திகள் ஆளுங்கட்சி பிரபலம் என்றால் ஒரு நியாயம்..? சாமானியன் என்றால் ஒரு நியாயமா…?-ஆவின் அதிகாரிகளுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

ஆளுங்கட்சி பிரபலம் என்றால் ஒரு நியாயம்..? சாமானியன் என்றால் ஒரு நியாயமா…?-ஆவின் அதிகாரிகளுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

by Askar

ஆளுங்கட்சி பிரபலம் என்றால் ஒரு நியாயம்..? சாமானியன் என்றால் ஒரு நியாயமா…?-ஆவின் அதிகாரிகளுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்..

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் எஸ்.வி.சேகர் அவர்கள் கொழுப்பு சத்து நீக்கப்பட்ட (Double Toned Milk) ஆவின் பால் 13பாக்கெட்டுகள் வாங்கியதாகவும், அதில் 9பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாகவும் டுவிட்டரில் முதல்வரை Tag செய்து பதிவிட்டிருந்தார். (தற்போதைய சூழலில் ஒருவர் தினசரி தேவைக்கு அதிகமாக பால் வாங்கி செயற்கையான பால் தட்டுப்பாடு ஏற்பட காரணமாகாதீர்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்த நிலையில் அவர் 13பாக்கெட்டுகள் வாங்கியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது)

அவர் டுவிட்டரில் பதிவிட்டு 3மணி நேரத்தில் ஆவின் நிறுவனத்தை சார்ந்த அதிகாரிகள் எஸ்.வி.சேகர் அவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று கெட்டுப் போன பாலிற்குப் பதிலாக புதிய பாலினை மாற்றிக் கொடுத்து விட்டு வந்துள்ளனர்.

இதுவே ஒரு சாமானிய மனிதன் ஆவின் பால் கெட்டுப் போய் விட்டது என ஆவின் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மைய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளித்தால் அது குறித்து ஆயிரம் கேள்விகளைக் கேட்டு சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரின் புகாரை பதிவு செய்ய மறுத்து, கெட்டுப் போன பாலிற்குப் பதிலாக புதிய பாலினை மாற்றித் தரவும் மறுத்த நிகழ்வுகள் தான் இதுவரை அரங்கேறி வந்துள்ளன.

அதுமட்டுமின்றி ஆவின் நிறுவனத்தின் மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் ஆவின் பாலினை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வரும் பால் முகவர்கள் ஆவின் பால் கெட்டுப் போனதாக பலமுறை புகார்கள் அளித்தும் இதுவரை ஒருமுறை கூட பால் முகவர்களுக்கு கெட்டுப் போன ஆவின் பாலிற்குப் பதிலாக புதிய பாலினை மாற்றித் தந்ததில்லை. அதற்கான இழப்பீடும் இதுவரை வழங்கப்பட்டதில்லை.

மேலும் பொதுவாக பால் கெட்டுப் போனதாக வாடிக்கையாளர்கள் தரப்பில் இருந்து புகார்கள் வந்தால் அந்த பாக்கெட்டில் உள்ள Batch எண்ணை வைத்து அந்த பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்ட பால்பண்ணை எது என்பதை கண்டறிந்து அந்த பால் பண்ணையில் சம்பந்தப்பட்ட Batch எண் கொண்ட பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டதில் ஏதேனும் தவறு நடந்திருக்கிறதா..? என்பதை முதலில் ஆய்வுக்குட்படுத்துவர்.

அதன் பிறகு அந்த பால் எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பதையும், ஆவின் பால் விநியோகம் செய்த சில மணி நேரங்களுக்குள் வேறு எங்கேனும் அது போன்ற புகார்கள் வந்திருக்கிறதா..? என்பதையும் விசாரித்து வாடிக்கையாளர் அளித்த புகார் உண்மையா..? இல்லையா..? என்பதை உறுதி செய்வர்.

அப்படி பால் கெட்டுப் போனதற்கு உற்பத்தி தரப்பில் நடந்த தவறுகள் தான் காரணம் என்பதை உறுதி செய்த பிறகே கெட்டுப் போன பாலினை மாற்றித் தருவார்கள். அதுவும் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலகத்தின் மூலமோ அல்லது மாதாந்திர அட்டைதாரர்களுக்கு பால் விநியோகம் செய்யும் விநியோக மையங்கள் மூலமோ தான் வழங்குவார்கள்.

ஆனால் ஆவின் பால் கெட்டுப் போக காரணம் உற்பத்தி தரப்பு தான் காரணம் என்றாலும் கூட ஆவின் பால் பாக்கெட்டுகளை பால் முகவர்கள் மற்றும் சில்லறை வணிகர்கள் சரியான குளிர் நிலையில் வைத்து பராமரிக்கவில்லை அதனால் தான் பால் கெட்டுப் போனது எனக் கூறி மாற்றித் தர மறுத்து விடுவார்கள் இதைத் தான் ஆவின் நிர்வாகம் காலங்காலமாக கடைபிடித்து வருகிறது. ஏனெனில் இதனை வைத்து ஆவின் அதிகாரிகள் தொடர்ந்து பணம் சம்பாதித்து வருகின்றனர்.

ஆனால் எஸ்.வி.சேகர் போன்ற ஒரு பிரபலமான நபர் ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதாலும், அவர் டுவிட்டரில் முதல்வரை tag செய்து பதிவிட்டு விட்டார் என்பதாலும் மேற்கண்ட நடவடிக்கைகள் எதையும் பின்பற்றாமல் அவர் பதிவிட்ட 3மணி நேரத்திற்குள் அவரது வீட்டிற்கே சென்று ஆவின் அதிகாரிகள் முறைவாசல் செய்து, கெட்டுப் போன பால் பாக்கெட்டுகளுக்கு மாற்றாக புதிய பாலினை வழங்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சாமான்ய மக்களுக்கும், பால் முகவர்கள், சில்லறை வணிகர்களுக்கும் ஒரு நிலை, ஆளுங்கட்சியைச் சார்ந்த பிரபலம் என்பதால் ஒரு நிலை என செயல்பட்ட ஆவின் அதிகாரிகள் மீது துறை ரீதியாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் பால்வளத்துறை செயலாளர் மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் ஆகியோரை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

சு.ஆ.பொன்னுசாமி (நிறுவனர் & மாநில தலைவர்) தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!