கோவில்பட்டி அருகே கோயிலில் வெள்ளிப் பொருள்கள் திருட்டு ..

கோவில்பட்டி அருகே கோயிலில் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி பாரதி நகர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் சுப்பையா மகன் ஆறுமுகம்(55). இவர் கோவில்பட்டியையடுத்த குருமலை அருள்மிகு பொய்யாழி அய்யனார் திருக்கோயில் பூசாரியாக இருந்து வருகிறார். இவர் மற்றும் இவரது மனைவி ராணி ஆகியோர் திங்கள்கிழமை கோயில் சன்னதியில் அபிஷேகம் செய்துவிட்டு, பிரகாரத்தில் உள்ள பிற சன்னதிகளுக்கு அபிஷேகம் செய்ய சென்றுவிட்டார்களாம்.

திரும்பி வந்து பார்த்த போது, அய்யனார் சன்னதியில் சுவாமி அணிந்திருந்த வேஷ்டி அவிழ்ந்த நிலையில் இருந்ததாம். இதைக் கண்டு திடுக்கிட்ட ஆறுமுகம், சன்னதிக்குள் சென்று பார்த்த போது அங்கிருந்த வெள்ளிப்பொருள்கள் திருடு போனது தெரியவந்ததாம்.

இதுகுறித்து கோயில் பூசாரி ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில், செவ்வாய்க்கிழமை கொப்பம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, கோயிலில் வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் :- அஹமது