அவசரகதியில் போடப்படும் சிவகாமிபுரம் சாலை…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சிவாகாமிபுரத்திலிருந்து காஞ்சிரங்குடி வரை உள்ள பழைய சாலையை சரி செய்யும் விதமாக புதிய சாலை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அரசாங்க விதிக்கு உட்பட்டு, டெண்டர் விதியின் படி செய்யப்படுவதாகவும் தெரியவில்லை, அதே போல் அங்கு நடக்கும் பணிகளை முறையாக மேற்பார்வையிடவும், அரசு பொறியாளர்களும் இல்லை.
மேலும் சாலை அமைப்பதற்கான எந்த வித முன் நடவடிக்கையும் எடுக்காமல், பழைய சாலையை கொத்தி, சமப்படுத்தாமல், அதன் மேலேயே ஜல்லிக்கற்களை பரப்பி மக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி வைத்துள்ளனர்.  இந்த அவசரகதியில் செயல்படும் நோக்கத்தை பார்க்கும் போது யாருடைய சுய லாபத்துக்காகவே, எந்த விதிமுறைகளும் பின்பற்றாமல் சாலை அமைப்பது புரிகிறது.
இது சம்பந்தமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமான தொழிலாளர் சங்க பொருளாளர் கருப்பச்சாமி கூறுகையில், “பழைய சாலையை குறைந்த பட்சம்  ஒரு அடியாவது தோண்டி புதிய சாலை அமைக்க வேண்டும்,  ஆனால் இவர்கள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் பழைய சாலைமீது ஜல்லிகற்களை கொட்டி புதிய சாலை அமைக்கிறார்கள் இதனால் இந்த சாலை விரைவில் சேதமடைந்துவிடும். இச்சாலையை முறையாக அமைக்காவிட்டால், விரைவில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.