ராமநாதபுரத்தில் கல்வி அலுவலகம் முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரம் அழகன்குளம் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக எஸ்.ராபர்ட் ஜெயராஜ் கடந்த 2009ல் பணியாற்றினார். அதே ஆண்டு அக்டோபர் 2 வது வாரம் ராபர்ட் ஜெயராஜை தலைமை ஆசிரியராக பதவி அளித்து கும்பரம் நடுநிலைப்பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் உத்தரவிடப்பட்டது. தனக்கு பதவி உயர்வு வேண்டாம். அழகன்குளம் ஆரம்பப்பள்ளியிலேயே ஆசிரியராக தொடர விரும்புவதாக ராபர்ட் ஜெயராஜ் சுய விருப்ப கடிதத்தை உதவி தொடக்கக்கல்வி அலுவலர் மூலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் 2009 அக்.12 ஆம் தேதி சமர்ப்பித்தார். இதற்கிடையில் மண்டபம் காந்தி நகர் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தேன்மொழியை, அழகன்குளம் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியையாக பணியிட மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. 2009 அக்.13 காலை பிரார்த்தனை முடிந்து வகுப்புகள் தொடங்கின. அப்போது மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பூலோக சுந்தர விஜயன், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் சூசைதாஸ், சூசைராஜ், சுரேஷ் குமார் ஆகியோர் அழகன்குளம் ஆரம்பப் பள்ளி சென்றனர். தலைமை ஆசிரியையாக தேன்மொழியை பொறுப்பேற்றுக் கொண்டு பணிப்பதிவேட்டில் கையெழுத்திடுமாறும், ராபர்ட் ஜெயராஜை ஏற்கனவே வழங்கிய உத்தரவுப்படி கும்பரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியிட மாறுதல் செல்ல வேண்டும் என மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பூலோக சுந்தரவிஜயன் வாய் வழி உத்தரவிட்டார். இதை ஏற்க மறுத்த ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜ், மற்றொரு உத்தரவு வழங்கினால் அதன்படி கும்பரம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்பதாக கூறினார். இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பூலோக சுந்தர விஜயன், ஆசிரியர் ராபர்ட் ஜெயராஜை ஒருமையில் பேசினார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆவேசமடைந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பூலோக சுந்தர விஜயன், ஆசிரியர் தன்னை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி தேவிபட்டினம் போலீசில் புகார் அளித்தார். தன்னை மரியாதை குறைவாக பேசிய தாக கூறி மாவட்ட தொடக்கக்கல்வி பூலோக விஜயன் மீது ராபர்ட் ஜெயராஜ் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் இருவர் மீதும் தேவிபட்டினம் போலீசார் வழக்கு பதிந்தனர்.

இதனையடுத்து ராபர்ட் ஜெயராஜை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பூலோக சுந்தர விஜயன் உத்தரவிட்டார். இது தொடர்பாக ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி 10 மாத சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, ஓம் சக்தி நகர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியராக ராபர்ட் ஜெயராஜ், பணியில் மீண்டும் சேர்ந்தார். வழக்கு விசாரணையின் அடிப்படையில் ஆசிரியர் ராபர்ட் குற்றமற்றவர் கடந்த 2019 மே 31 ல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு வழங்க வேண்டிய 10 மாத சம்பளம், 10 ஆண்டு கால கட்டத்தில் வழங்க வேண்டிய பணி ஊக்கத் தொகை கோரி உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நீதிமன்ற உத்தரவு துறைரீதியான நடவடிக்கையை கட்டுப்படுத்தாது.எனக் கூறி ராபர்ட் ஜெயராஜ் குற்றமற்றவர் என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்க தொடக்கக் கல்வித்துறை ஏற்க மறுத்து ராபர்ட் ஜெயராஜுக்கு வழங்க வேண்டிய பண பலன்கள் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டன. ராபர்ட் ஜெயராஜ் மீதான தொடக்கக் கல்வி துறை நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது எனக்கூறி பழிவாங்கும் போக்கை விலக்கிக் கொண்டு நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மண்டபம் கல்வி மாவட்ட அலுவலகம் முன் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் இன்று (08/02/2021) காலை காத்திருப்பு போராட்டம் மேற்கொண்டனர். நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் ராபர்ட் ஜெயராஜ் மீதான பிரச்னைக்கு இன்னும் ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக கல்வி அலுவலர்கள் உறுதி அளித்தனர். இதனையடுத்து மதியம் 2 மணி வரை நீடித்த காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ஜோசப் ரோஸ், மாவட்ட தலைவர் முனியசாமி, மாவட்ட செயலாளர் முத்து முருகன், மாவட்ட பொருளாளர் அருள், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சேகர், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கணேசமூர்த்தி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமண்டபம் வட்டார நிர்வாகிகள் ஜெயசீலன், ஐசன், பிரான்சிஸ் இமானுவேல், கோமகன், ரவிச்சந்திரன்,திருப்புல்லாணி வட்டார நிர்வாகிகள் ராமு, முரளி மோகன், கிறிஸ்டோபர், கமுதி வட்டார நிர்வாகிகள் சந்திரசேகர், குலசேகரன், ஹரி கிருஷ்ணன்,முதுகுளத்தூர் வட்டார நிர்வாகிகள் பிரிட்டோ, ஜோசப், காளிமுத்து,கடலாடி வட்டார நிர்வாகிகள் அருள், முருகானந்தம், குருசாமி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார நிர்வாகி அசோக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.