
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை கமுதக்குடியில் ஒரு இண்டிகா கார் பழுதாகி நின்று கொண்டிருந்தது. நெடுஞ்சாலை போலீசார் ரோந்து சென்றபோது பழுதான காரின் அருகே போலீசார் சென்றனர். அப்போது போலீசாருக்கு பயந்து, காரில் இருந்த இருவர் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் விரட்டியதில், ஒருவரை மட்டும் சிக்கிய நிலையில் மற்றொருவர் தப்பித்து ஓடிவிட்டார். சிக்கிக் கொண்டவர் காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம் எஸ். கோவில்பட்டியைச் சேர்ந்த பெரியகருப்பன்,25 என தெரியவந்தது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே ஒத்தக்கடை பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சாவை கடத்துவதற்கு காரில் கொண்டு வந்தோம். கார் ரேடியேட்டர் பழுதாகிவிட்டது. பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது போலீஸ் வாகனம் வந்ததை பார்த்து தப்பிக்க ஓடினோம் என விசாரணையில் கூறினார். நான்கு மூடைகளில் இருந்த கஞ்சா 200 கிலோ இருக்கலாம் என போலீசார் கூறினர். காரை பறிமுதல் செய்த போலீசார் பிடிப்பட்ட நபரிடம் பரமக்குடி டிஎஸ்பி அலுவலகம் கொண்டு சென்று தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
தப்பியோடிய மற்றொரு நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment.