
புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் ஆரோக்கிய ஜேசு என்பவரது விசைப்படகில் தங்கச்சிமடம் மெசியா, வட்டான்வலச நாகராஜ், தாதனேந்தல் செந்தில்குமார், மண்டபம் இலங்கை தமிழர் முகாம் சாம்சன் டார்வின் ஆகியோர் ஜன.18ல் மீன்பிடிக்க சென்றனர். மாயமான மீனவர் 4 பேரும் இலங்கை கடற்படை தாக்குதலில் இறந்து விட்டதாக தகவல் கிடைத்தது.இவர்களின் குடும்பத்தாருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்ட 4 பேரின் உடல்கள் யாழ்ப்பாணம் அரசு பொது மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு முடிந்து 4 பேரின் உடல்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் ஒப்படைக்கப்பட்டது. இலங்கை கடலோர காவல் படை ரோந்து கப்பலில் இருந்து, இந்திய கடலோர காவல் படை கப்பலில் இன்று காலை 10 மணி அளவில் ஒப்படைக்கப்பட்ட உடல்கள் கோட்டைபட்டினம் துறைமுகத்திற்கு மதியம் 2:20 மணிக்கு வந்தடைந்தன. ஆம்புலன்ஸ் மூலம் மாலை 4:20 மணிக்கு ராமநாதபுரம் வந்த உடல்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து 4 பேரின் உடல்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப் பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
You must be logged in to post a comment.