தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள்9 மாதங்களுக்குப் பின் அனுமதி

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து. பொதுமக்கள் அதிகம் கூடும் வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள் மூடப்பட்டன. கடற்கரைகளில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டது. பொது போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி சில தளர்வுகள் அடிப்படையில் அரசு பேருந்துகள் ஜூன் ஒன்றாம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் தளர்வுகள் அடிப்படையில், வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடவும், தனுஷ்கோடி கடலில் தர்ப்பணம் மற்றும் தீர்த்தமாடுவதற்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் தீர்த்தம் இறைத்து ஊற்றும் பணியாளர்கள், யாத்திரை பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், வாகன ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் வேலை இழந்து வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களின் நலன் கருதி கோயில் தீர்த்தக் கிணறுகளை திறக்கவும், தனுஷ்கோடி கடலில் தீர்த்தமாடச் செல்ல அனுமதி கோரி பல்வேறு அரசியல் கட்சிகள் நூதன போராட்டங்கள் நடத்தினர். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அன்வர் ராஜா, யாத்திரை பணியாளர்கள் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் புரோகிதர்கள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக., வினர் இன்று காலை உண்ணாவிரதம் அறிவித்தனர். இந்நிலையில், 9 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் இன்று அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகள் கடலழகை கண்டு ரசித்தனர்.