Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சுவனத்திற்கு செல்லும் வழி குறித்து அண்ணலார் கூறியது என்ன?..ரமலான் சிந்தனை – 26..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

சுவனத்திற்கு செல்லும் வழி குறித்து அண்ணலார் கூறியது என்ன?..ரமலான் சிந்தனை – 26..கீழை ஜஹாங்கீர் அரூஸி…

by ஆசிரியர்

இரத்த உறவுகளுடன் இங்கிதமாகவும், இதமாகவும் நடந்து கொள்வதும் சுவனத்தில் நுழைவிக்கத்தக்க சிறந்த செயற்பாடாகப் போற்றப்படுகின்றது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! என்னை சுவனத்தில் நுழைவித்து நரகத்தை விட்டும் தூரமாக்கக் கூடிய ஒரு அமலை எனக்குச் சொல்லித் தாருங்கள் என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள்,

“நீ அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணைவைத்து விடாதே! தொழுகையை நிலை நிறுத்து, ஜகாத்தும் கொடுத்துவா, குடும்ப உறவைப் பேணிக்கொள்” என்றார்கள். (அறிவிப்பவர் : ஹாலித் இப்னு ஸைத் அல் அன்ஸாரி(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

அல்லாஹ்வை வணங்குவதும், தொழுகையை நிலைநிறுத்துவதும்,ஜகாத் கொடுப்பதும் எப்படி அல்லாஹ்வுக்கான இபாதத் கடமைகளோ, அதேபோன்று தான் குடும்ப உறவுகளை பேணி வாழ்வதும் இறைவனுக்கான இபாதத் ஆகும். மற்ற கடமைகளை நிறைவேற்றினால் சொர்க்கம் எப்படி நமக்கு உரிமையோ, அதேபோன்று குடும்ப உறவுகளை பேணுவோருக்கும் சொர்க்கம் உரிமையாகும் என நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

அல்லாஹ் ஏற்படுத்தி தந்துள்ள குடும்ப உறவுகளைப் பேணுவதால், மறுமையின் நன்மைகள் மட்டுமன்றி இம்மையிலும் நன்மைகள் உள்ளதாக இஸ்லாம் கூறுகின்றது.

யார் தனக்கு அல்லாஹ் வழங்கும் உணவில் அபிவிருத்தியையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவரது இரத்த உறவைப் பேணிக்கொள்ளட்டும் என்று பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

தன்னுடன் இணைந்து இருப்போருடன் சேர்ந்து நடப்பவன் இரத்த உறவைப் பேணுபவனல்ல. உண்மையில் தன்னுடன் யார் உறவைத் துண்டித்தாலும் அவருடன் உறவு பேணுவதே இரத்த உறவைச் சேர்ந்து நடப்பவனாவான்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்(ரலி), நூல்: புகாரி)

இன்று நம்மில் சிலர் தனது குடும்ப உறவுகள் தன்னை விலக்கி வைத்து வாழும் சூழலிலும் அவர்களோடு உறவு பாராட்ட வேண்டுமென்று விரும்புவதையும், இதனை அந்த குடும்ப உறவுகள் உதாசீனப்படுத்துவதையும் பார்க்கின்றோம்.

உறவுகளை உதாசீனப்படுத்தி வாழ்பவர்கள் இவ்வுலகில் எவ்வளவு பெரிய செல்வந்தராகவும், பதவி உடையவராகவும் இருந்தாலும் நாளை மறுமையில் அல்லாஹ்வினால் உதாசீனப்படுத்தப்பட்டு சொர்க்கத்தை விட்டு விலகி இருக்கும் மனிதராகவே காணப்படுவார்.

தனது குடும்ப உறவுகள் தன்னை ஒதுக்கி வைத்து வாழும் சூழல் குறித்து ஒரு நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் இவ்வாறு முறையிட்டார்.“எனக்கு சில உறவினர்கள் இருக்கின்றனர். அவர்களுடன் ஒட்டி நடந்தால் அவர்கள் வெட்டிச் செல்கின்றனர். நான் அவர்களுக்கு நன்மை செய்கின்றேன். அவர்களோ எனக்குத் தீமை செய்கின்றனர். நான் அவர்களுடன் கருணையுடன் நடந்து கொள்கின்றேன். அவர்கள் என்னுடன் கடுமையாக நடந்து கொள்கின்றனர் என்றார்.

அதற்கு நபியவர்கள், நீ கூறுவது போல் நீ நடந்து கொண்டால் அல்லாஹ்விடமிருந்து ஒரு உதவியாளர் உனக்கு நியமிக்கப்பட்டிருப்பார்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்)

அன்பானவர்களே, நம்மை யார் விலக்கி வைத்து வாழ்ந்தாலும் அவர்களும் நமது ரத்த உறவுகளே என்ற நினைப்போடு அவர்களுடன் உறவை தொடர விரும்புவோருக்கு அல்லாஹ்வின் புறத்தில் இருந்து ஓர் உதவியாளர் கிடைப்பார் என்ற நற்செய்தியை நாயகம்(ஸல்) அவர்கள் கூறியிருப்பது முக்கியமானதாகும்.

எனவே, முடிந்தவரை அனைவரையும் நாம் அணுசரித்து, விட்டுக்கொடுத்து இணங்கிச் செல்ல முயல வேண்டும். இதுவே, உண்மையான இரத்த பந்தமாகும். இந்த உறவு மனிதனாக ஏற்படுத்திக் கொண்டதல்ல, அல்லாஹ் ஏற்படுத்தி கொடுத்த உறவு பந்தம் என்பதால் இங்கே நாம் கூடி வாழ்ந்தால் அதில் அல்லாஹ்வின் அன்பும், விலகி வாழ்ந்தால் அல்லாஹ்வின் கோபமும் அதில் இருக்கும் என்பதை உணர்வோமாக.

நீங்கள் (அல்லாஹ்வின் வேதத்திற்கு கீழ்ப்படிவதை விட்டும்) புறக்கணித்து விடுவீர்களாயின், பூமியில் (இரத்தத்தை ஓட்டி) விஷமம் செய்யவும், இரத்த பந்தத்தில் உள்ள உங்களது உறவுகளை துண்டித்துவிடவும் முனைவீர்களா?”.(அல்குர்ஆன் – 47:22)

நமது குடும்ப உறவுகள் என்பது அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை யாரெல்லாம் மனதில் உறுதிபடுத்துகிறோமோ, அவர்களின் இதயங்களில் அல்லாஹ்வின் அன்பும் அருளும் நிறைந்திருக்கும்.

எனவே, குடும்ப உறவைப் பேணி நடந்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையும் பெறுவதுடன் “குடும்ப உறவைத் துண்டித்தவன் சுவனம் நுழைய மாட்டான்” (அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி), நூல்: முஸ்லிம், புகாரி) என்ற அண்ணலாரின் எச்சரிக்கைக்கு அப்பாற்பட்ட கூட்டத்தில் இணைந்து கொள்வோமாக!

நல்லோராய் வாழ்வதற்கு உள்ளத்தை சீர்படுத்துவோம்! இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை – 27ல் காணலாம். கீழை ஜஹாங்கீர் அரூஸி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!