Home செய்திகள் ஏன் இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கூறுவது குற்றமாக்கப்பட்டது?- டாக்டர் ஃபரூக் அப்துல்லா..

ஏன் இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கூறுவது குற்றமாக்கப்பட்டது?- டாக்டர் ஃபரூக் அப்துல்லா..

by Askar

கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் பிறப்பதற்கு முன்பு கண்டறிந்து கூறுவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும்.

தண்டனைக்குரிய குற்றமென்றால் இந்தக் குற்றத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும் நபர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். தவறினால் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள்.

குறிப்பாக ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் தங்களது ஸ்கேன் உபகரணங்களை முறையாக பதிவு செய்து சரியான நேரத்தில் புதுப்பித்து வர வேண்டும். ஸ்கேன் செய்யும் போது நிரப்பப்பட வேண்டிய பாரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

அதிக நோயாளிகளைக் கையாளும் இடங்களில் தவறுதலாகக் கூட இந்த பாரங்களை முறையாக பராமரிக்கத் தவறினால் கடுமையான தண்டனையும் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

ஏன் இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கூறுவது குற்றமாக்கப்பட்டது?

இதற்குக் காரணம் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கில் தொடர்ச்சியாக பெண் பிள்ளைகள் பிறப்பு சதவிகிதம் சரிந்து கொண்டே வந்தது.

பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் போது வரதட்சணை – சீர் வரிசை போன்றவற்றை செய்ய வேண்டும் என்ற அச்சமும்,

கூடவே ஆண் பிள்ளைகள் தான் குடும்பத்தின் வாரிசுகள் என்று புரையோடிப்போன நம்பிக்கையும் சேர்ந்ததால்,

பெண் பிள்ளைகள் பிறக்கும் போதே கள்ளிப் பால் ஊற்றிக் கொல்வதும் தலையணையை மேலே அமுக்கிக் கொல்வதும் என தொடர்ந்து நம் முன்னோர்கள் கொடிய செயல்களைக் கடைபிடித்து வந்தனர்.

இன்னும் அறிவியல் வளர்ச்சி அடையவே கருவில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை ஸ்கேன் மூலம் அறிந்து பெண் என்றால் அபார்சன் செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.

இந்த விகிதத்தில் சென்று கொண்டிருந்தால் நாட்டில் நாளடைவில் பெண்களே இல்லாத நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து

பிசிபிஎன்டிடி எனும் சட்டம் 1994 இல் கொண்டு வரப்பட்டது இதில் கருவில் வளரும் குழந்தையின் பாலினத்தை அறிவதும் வெளிக்கூறுவதும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டது.

எனினும் ஆங்காங்கே அரிதாக சில ஸ்கேனிங் சென்டர்களில் சிசுக்களின் பாலினம் கண்டறிந்து கூறப்படும் பிறகு அபார்சன் நடப்பதும் தொடர்ந்து கொண்டு தான் வருகிறது இதைத் தடுக்க அரசாங்கமும் சட்டத்தைத் தீட்டி செயல்முறைப் படுத்தி வந்தாலும்

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பட்டுக்கோட்டையார் எழுதியதைப் போல

மக்களின் ஆழ்மனதில் சீழ்கட்டியாக வைத்து வளர்ந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளை வெறுப்பு என்பது எப்போது அழியுமோ அப்போது தான் இந்த குற்றங்கள் ஒழியும். அதுவரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

எனினும் இது போன்ற சட்டங்கள் செயல்முறையில் இருப்பதால் தான் இன்று ஆண் பிள்ளைகளுடன் ஒப்பிடும் அளவு பெண் பிள்ளைகள் பிறக்கிறார்கள்.

எனினும் இது போன்ற சட்டங்கள் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா , துபாய் , சிங்கப்பூர் போன்றவற்றில் இல்லை. காரணம் அங்கெல்லாம் பெண் பிள்ளைகளை பிறப்பதற்கு முன்பே மக்கள் கொல்வதில்லை.

நமது சமூகத்தில் வரதட்சணை என்பது மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறதே அன்றி குறையவில்லை. யாரும் வரதட்சணையை கேவலமென்று நினைப்பதில்லை மாறாக அதை உரிமை என்றே மணமகன் வீட்டார் கூச்சமின்றிப் பெறுகின்றனர்.

சமூகத்தில் வரதட்சணை இருக்குமட்டும் பெண் சிசுக் கொலை இருந்தே தீரும்

உண்மையில் நமது நாட்டில் இப்படி ஒரு சட்டம் இருப்பதை எண்ணி நாமெல்லாம் வெட்கப்படத்தான் வேண்டும்

நமது எண்ணங்கள் நாம் கொண்ட மூடநம்பிக்கைகள் நாம் வரதட்சணை மீது கொண்டுள்ள வெறி ஆகியவற்றைக் கைவிட்டாலே ஒழிய இந்த இழிநிலையில் இருந்து நமக்கு சுதந்திரம் இல்லை

நன்றி

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர் சிவகங்கை

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!