Home செய்திகள் காவலர்களுக்கு நலவாரியம்; ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..

காவலர்களுக்கு நலவாரியம்; ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்..

by ஆசிரியர்

காவலர்களின் நலனை பேணும் வகையில் காவலர்களுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும் என தென்காசியில் நடந்த ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசியில் நெல்லை மாநகர மற்றும் நெல்லை சரக ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு  ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் மாடசாமி தலைமை வகித்தார். திரைப்பட இசை அமைப்பாளர் கலைமாமணி பரத்வாஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். தொடர்ந்து பணியிலுள்ள மற்றும் ஒய்வு பெற்ற காவலர் குடும்பத்தினரின் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கியும், சிறப்பாக நேர்மையாக பணியாற்றி வரும் திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் சபாபதி, மாநகர இன்ஸ்பெக்டர் முருகன், தென்காசி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் தாமரை விஷ்ணு ஆகியோருக்கு  கேடயம் வழங்கப்பட்டது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை சங்க தலைவர் பரமசிவன், செயலாளர் சுரேஷ், சங்க துணைச் செயலாளர் அய்யப்பன், ஒருங்கிணைப்பார் முருகானந்தம், துணை செயலாளர் சீனி வாசராகவன் செய்திருந்தனர்.

இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காவலர்களுக்கு என படுக்கை வசதி உடைய காவலர் மருத்துவமனை அமைக்க வேண்டும். காவலர் அங்காடியில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு பணி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற காவல் துறையினரின் குறைகளை களைய அவர்களின் நலத்தினை அரசு பேண உண்மையான அக்கறையுடன் செயல்பட நல வாரியம் அமைத்து அனைத்து காவல்துறை ஓய்வு பெற்றவர்களும் எளிதில் அவர்களுடன் தொடர்பு கொள்ள ஏதுவாக வசதி செய்து கொடுக்க வேண்டும். ஓய்வு பெற்ற 70 வயது மற்றும் 75 வயதை நிறைவு பெற்ற ஓய்வூதியர்களின் ஓய்வு ஊதியத்தை 10 சதவீதத்தை 15 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஓய்வு பெற்றவர்கள் கடன் பெற்ற கமிட்டேஷன் பணத்தினை தவணையாக 12 வருடங்களில் முழு தொகையை கட்டிய பின்பும் நியாயம் இல்லாமல் 3 வருடங்கள் அதிகப்படியாக பணம் பிடித்தம் செய்வது ஓய்வு பெற்றவர்களை மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றது. உடனடியாக 15 வருடங்கள் பிடித்தம் செய்வதை 12 வருடங்களாக குறைத்து விட வேண்டும். திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எடுத்த நடவடிக்கையை போன்று தமிழக அனைத்து மாநில காவல்துறை அலுவலகங்களிலும் வேலைக்கு எடுபடியாக அமர்த்தியுள்ள காவலர்களை அவர்கள் பணிபுரியும் ஆயுதப்படைக்கோ காவல் நிலையங்களுக்கோ திருப்பி அனுப்பி காவலர்கள் பற்றாக்குறை வேலை அழுத்தத்தால் ஏற்படும் தற்கொலைகளை தடுக்க உதவ வேண்டும். மாதம் ஒரு நாள் காவல் கண்காணிப்பாளருடன் ஓய்வு பெற்ற காவல் துறையினர் சந்திப்பு நடத்த வேண்டும். அதன் மூலம் ஓய்வு பெற்றவர்களுக்கு தெரிந்த குற்றம் சம்பந்தமான தகவல்களை தெரிவிப்பதன் மூலம் ஒவ்வொரு பகுதியை பற்றிய உண்மை நிகழ்வுகளை மேல் அதிகாரிகள் தெரிந்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பாக அமையும். அரசு அகவிலைப்படி உயர்த்தி வழங்கும் போது அதே நாளில் மாநில அரசும் வழங்க வேண்டும். 80 வயது துவக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் நேர்காணலில் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நடந்த பழைய நடைமுறையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் பரமசிவன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!