Home செய்திகள் குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் தென்காசி மாவட்ட காவல்துறை..

குற்ற சம்பவங்களை தடுக்கும் பணியில் சிறப்பாக செயல்படும் தென்காசி மாவட்ட காவல்துறை..

by mohan

தென்காசி மாவட்ட காவல்துறை குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தலின் படி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து, சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட 91 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டில், 39 கொலை வழக்குகள் தாக்கலான நிலையில், 2023-ஆம் ஆண்டில் 37 கொலை வழக்குகள் தாக்கலாகியுள்ளது. 2023-ஆம் ஆண்டில், 569 சொத்து தொடர்பான வழக்குகளில் 369 வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டு 3,35,02,189, மதிப்பிலான சொத்துக்களும், 37 சொத்து வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டு 16,19,500 மதிப்பிலான சொத்துக்களும், மீட்கப்பட்டு மொத்தம் 3,51,21,689 மதிப்பிலான சொத்துக்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. திருட்டு குற்றங்களை தடுப்பதில் மாவட்ட காவல் துறை விழிப்புடன் செயல்படுவதால் பொதுமக்கள் மத்தியில் காவல் துறையின் செயல்பாடுகள் பெருமளவில் பாராட்டப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில், இதுவரை மொத்தம் 4511 CCTV கேமிராக்கள் குற்ற நிகழ்வு நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டுள்ளது. அதன் முலம் நகை கடைகள், அடகு கடைகள், வங்கிகள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சந்திப்பு சாலை போன்ற இடங்களில் திருட்டு குற்றங்கள் நடக்காமல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் சட்ட விரோமாக மதுக்குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக 1601 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட 1617 எதிரிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 44 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர தொடர் மதுக் குற்றங்களில் ஈடுபட்ட 2 நபர்கள் மீது சட்ட விரோதமாக மதுபானங்களை தயாரித்தல் மற்றும் விற்பனை தடுப்புச்சட்டத்தின் (Bootlegger Act) கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, சிறைக்காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில், பான்மசாலா மற்றும் குட்கா போன்ற அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 398 நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது 384 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 19,80,474 மதிப்புள்ள 2893 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, கூல்லீப் மற்றும் பான்சாலா போன்ற புகையிலைப் பொருட்களை மீண்டும் மீண்டும் விற்பனை செய்த குற்றத்திற்காக 55 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், தென்காசி மாவட்டத்தில் புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் விளைவுகள் குறித்து, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிக்கூடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

2022-ஆம் வருடம் அதிகளவில் விபத்துகளால் உயிரிழப்புகள் இருந்து வந்த நிலையில் சிறப்பு வாகனத் தணிக்கை மற்றும் பல்வேறு சாலை விழிப்புணர்வு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், 2023 ஆம் வருடம் குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்கள், அதிவேகமாக வாகனத்தை ஓட்டியவர்கள், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியவர்கள் மற்றும் சாலை விதிகளை மீறி வாகனங்களை ஓட்டியவர்கள் மீது 2,80,687 வாகன அற்ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 4463 நபர்களின் ஓட்டுனர் உரிமத்தினை தற்காலிகமாக ரத்து செய்திட வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு, தென்காசி மாவட்டத்தில், சைபர் கிரைம் காவல் நிலையம் தனியாக செயல்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில், 48 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு தொடர்பான 08 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 2023-ஆம் ஆண்டில், ரூபாய் 25,00,000 காணாமல் போன 150 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டில் 142 விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2023-ஆம் ஆண்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபட்டவர்கள் மீது 389 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக தொடர் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட காவல்துறையின் Facebook, Instagaram and Twitter சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. 2023- ஆம் ஆண்டில், சமுக ஊடகப்பிரிவின் மூலம், சமுக ஊடகங்களில் ஆட்சேபகரமான பதிவுகளை பதிவிட்ட 12 நபர்களை கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதாக தென்காசி மாவட்ட காவல் துறையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!