Home செய்திகள் பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் இருசக்கர வாகனம்- இளைஞர் சாதனை.

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ஹைப்ரிட் இருசக்கர வாகனம்- இளைஞர் சாதனை.

by mohan

பெங்களூரை சேர்ந்த கணவன், மனைவியின் கண்டுபிடிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சங்கள் தெரிந்தால் நீங்கள் வியப்பில் மூழ்குவது உறுதி.இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னை காரணமாக தற்போது மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.பொதுவாக பல்வேறு காரணங்களால் காற்று மாசடைந்து வருகிறது. இதற்கு தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை ஒரு காரணம் என்றால், வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையும் முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பாக பெட்ரோல், டீசல் வாகனங்களால்தான் காற்று மிக கடுமையாக மாசடைகிறது.

இதனால் காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து விட்டு, அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வு என்பதில் மாற்று கருத்து இல்லைதான். ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் தற்போது மிகவும் குறைவாக உள்ளது. ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், எலெக்ட்ரிக் வாகனங்கள் எவ்வளவு கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் என்பதே ரேஞ்ச் என குறிப்பிடப்படுகிறது. தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக உள்ளதால், அவற்றை வாங்க மக்கள் தயங்குகின்றனர்.நடு வழியில் திடீரென சார்ஜ் தீர்ந்து நின்று விட்டால் என்ன செய்வது? என்பதே பொதுமக்களின் தயக்கத்திற்கு காரணம். அதற்கு ஏற்ப இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களும் இன்னும் பெரிய அளவில் கட்டமைக்கப்படவில்லை. எனவே ஒரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கும்போது நடு வழியில் சார்ஜ் இல்லாமல் நின்று விட்டால் சிக்கல்தான்.

ஆனால் பெங்களூர் நகரை அடிப்படையாக கொண்டு இயங்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. மெலடாத் ஆட்டோ காம்போனென்ட்ஸ் (Meladath Auto Components) என்ற நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ராகேஷ் மெலடாத் கருணாகரன் என்பவரும், அவரது மனைவி வின்னி கங்காதரன் ஆகியோரும் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கினர். பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான ஆஃப்டர் மார்க்கெட் கன்வெர்ஷன் கிட்களை (Conversion Kits) உருவாக்குவதற்காக இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. இதன்படி இவர்கள் தற்போது எலெக்ட்ரிக் கன்வெர்ஷன் கிட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த கிட் மூலம் வழக்கமான ஸ்கூட்டர்களை எலெக்ட்ரிக்-ஹைப்ரிட் ஸ்கூட்டராக மாற்ற முடியும்.எலெக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் என இரண்டு மோடுகளில் தனித்தனியாக இயங்க இந்த கன்வெர்ஷன் கிட் உதவி செய்கிறது. இதில், எலெக்ட்ரிக் மோடை பயன்படுத்தினால், சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் முழுமையாக பயணம் செய்ய முடியும். இது ஒரு முறை சார்ஜ் செய்தால் பயணிக்கும் தூரம் ஆகும். ஒரு வேளை சார்ஜ் தீர்ந்து விட்டால், அதன்பின் பெட்ரோல் மோடில் வைத்து ஸ்கூட்டரை தொடர்ந்து இயக்க முடியும். இந்த கிட்டை பயன்படுத்த வேண்டுமென்றால், ஸ்கூட்டரின் கட்டமைப்பில் எந்தவொரு மாற்றத்தையும் செய்ய வேண்டியதில்லை என கூறப்படுகிறது. இது இந்த கிட்டின் கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் ஸ்கூட்டரை மீண்டும் பழையபடி பெட்ரோலில் மட்டும் இயங்க கூடிய வகையில் மாற்ற வேண்டுமென்றால், இந்த கிட்டை எளிதாக அகற்றி விட முடியும். இதற்கு எந்தவிதமான வெல்டிங் அல்லது கட்டிங் வேலைகளும் தேவைப்படாது. லித்தயம் அயான் பேட்டரியை இந்த கிட் கொண்டுள்ளது. வீட்டிலேயே எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், பெட்ரோல் மோடு மூலம் தொடர்ந்து ஸ்கூட்டரை இயங்க வைக்கும் திறன் இந்த கிட்டிற்கு உள்ளது. ப்யூர் எலெக்ட்ரிக் உடன் ஒப்பிடும்போது இது இந்த கிட்டின் கூடுதல் சிறப்பம்சங்களில் ஒன்று.

மக்கள் மத்தியில் ரேஞ்ச் தொடர்பாக உள்ள பதற்றத்தையும் இது முற்றிலுமாக நீக்குகிறது. ஏனெனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து விட்டால், அவர்கள் எளிதாக மீண்டும் பெட்ரோல் நிரப்பி கொள்ள முடியும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் இல்லாத சூழலில், இது ஒரு வரப்பிரசாதம்தான். ஆனால் இந்த கன்வெர்ஷன் கிட் இன்னும் வணிகமயமாக்கப்படவில்லை. ஆனால் அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆட்டோமொபைல் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இதுபோன்ற தனித்துவமான ஆஃப்டர் மார்க்கெட் தயாரிப்புகளை கண்டுபிடிப்பது அருமையான ஒரு விஷயம்தான். மெலடாத் ஆட்டோ காம்போனென்ட்ஸ் நிறுவனத்தின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!