நிலக்கோட்டை அருகே அனாதையாக ரோட்டில் கிடந்த தங்கநகை பையை போலீசிடம் ஒப்படைத்த இளைஞர்கள்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டி சேர்ந்த ஆசைத்தம்பி வயது 30. இவரும் இவரது மனைவி வைத்தீஸ்வரி வயது 27. இருவரும் நேற்று முன்தினம் மதுரைக்கு உறவினர்கள் விசேஷத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் சிலுக்குவார்பட்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது கழுத்தில் இருந்த நகையை இரவு நேரம் என்பதால் மோட்டார் சைக்கிளில் நகையுடன் செல்வதைப் பார்த்து திருடர்கள் யாரும் பறித்து விடுவார்கள் என்பதை கவனத்தில் கொண்டு ஒரு பையில் நகைகளைப் போட்டு மோட்டார் சைக்கிளில் தொங்க விட்டு வந்து கொண்டிருந்தனர். அவ்வாறு வந்தபோது சிலுக்குவார்பட்டி அடுத்துள்ள முருக தூரன்பட்டி பகுதியில் ரோட்டில் விழுந்துவிட்டது. இதை கவனிக்காத ஆசைதம்பி நேராக வீட்டிற்கு வந்துவிட்டார். அப்போது இவரைப் பின்தொடர்ந்து வந்த பல பட்டியை சேர்ந்த இளைஞர்கள் பிரவீன் குமார், அழகுராஜா இருவரும் சாலையில் அனாதையாக கிடந்த பையை எடுத்து உடனடியாக செல்போன் மூலமாக திண்டுக்கல் போலீஸ் கட்டுப்பாட்டு போலீஸ் அதிகாரி அழை 100க்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு பின்னர் போலீஸ் மாரிமுத்து விரைந்து சென்று இளைஞர்களிடம் இருந்த பையை திறந்து பார்த்தபோது அந்தப் பையில் 15 பவுன் தங்க நகையும், மற்றும் இதரப் பொருட்களும், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளுடன் இருந்தது. அதிலிருந்த ஆதார் அட்டை மற்றும் அடையாள அட்டைகளை வைத்து சிலுக்குவார்பட்டி சேர்ந்த பொதுமக்களிடம் விசாரித்த போது ஆசைத்தம்பி மற்றும் வைத்தீஸ்வரி என்பது விசாரணையில் தெரியவந்து உடனடியாக நகையை ஒப்படைத்தனர். இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகிய இருவரும் பள்ளபட்டியை சேர்ந்த இளைஞர்களை அழைத்து பாராட்டி, பரிசுகள் வழங்கினார்கள்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா