Home செய்திகள் தென்காசியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு முக்கிய உறுதி மொழிகள் ஏற்பு..

தென்காசியில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு முக்கிய உறுதி மொழிகள் ஏற்பு..

by mohan

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் செவிலியர்களின் தன்னலமற்ற மருத்துவ சேவைக்கு மானசீகமாக நன்றி சொல்லும் விதமாக உலக செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் செவிலியர்களின் சேவைகளை நினைவு கூர்ந்து செவிலியர்கள் அனைவரையும் மருத்துவமனை கண்காணிப்பாளர் இரா.ஜெஸ்லின் பாராட்டினார்.தொடர்ந்து மருத்துவமனையின் செவிலியர்கள் முக்கிய உறுதி மொழிகளை ஏற்றனர். அதில், நான் இந்த அவையில், இறைவன் முன்னிலையில், எனது வாழ்க்கையை தூய்மையாகவும், எனது தொழிலை அர்ப்பணிப்புடனும் நடத்தி செயல்படுவேன் என உறுதி எடுக்கிறேன். எனக்கோ, எனது செவிலிய பெயருக்கோ களங்கம் விளைவிக்கும் அனைத்து செயல்களில் இருந்தும் நான் விலகி இருப்பேன். நோயாளர்களுக்கு எந்த விதமான கெடுதலையும் விளைவிக்கக் கூடிய மருந்தினை கொடுக்கவோ அல்லது நான் எடுக்கவோ மாட்டேன். எனது சக்திக்கு உட்பட்டு, எனது செவிலிய பணியின் தரத்தை நிலைக்கச் செய்யவும், அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் நான் பாடுபடுவேன். நான் பணியில் இருக்கும் போது, எனக்குத் தெரியவருகிற நோயாளர்களின் தனிப்பட்ட மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட ரகசியத்தைக் காப்பேன். எனது முழு மனதுடன் மருத்துவர், நோயாளருக்கு செய்யும் பணிகளில் அவருக்கு உதவியாக இருப்பதுடன், என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளரின் நலனுக்காக நான் பாடுபடுவேன் என்ற உறுதிமொழியை அனைத்து செவிலியர்களும் மனதார ஏற்றுக் கொண்டனர்.

போரில் காயம்பட்ட இராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவையாற்றி ‘விளக்கேந்திய மங்கை’ என்று உலகம் முழுவதும் போற்றப்படும் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினமான மே.12 உலக செவிலியர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ மனைகளில் அன்புடனும், பரிவுடனும் கவனித்துச் சேவை செய்யும் செவிலியர்களுக்கு மானசீகமாக நன்றி சொல்லும் விதமாகவே ‘உலக செவிலியர்’ தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. சிறப்பு நிகழ்வாக மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தலைமையில் செவிலியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மருத்துவமனை வளாகத்தினுள் ஊர்வலம் வந்து உறுதி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட இணை இயக்குனர் மருத்துவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா. ஜெஸ்லின் தலைமை தாங்கி மருத்துவமனையின் முதுகெலும்பாக திகழும் செவிலியர்களின் அயராத பணிகளை பாராட்டியதோடு உறைவிட மருத்துவர் S.S.ராஜேஷ் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் செவிலியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். நிகழ்வில் செவிலியர் கண்காணிப்பாளர்கள் பத்மா, திருப்பதி, ராஜாதி ஜெகதா, முத்துலட்சுமி,வசந்தி ஆகியோரின் சேவைகளை பாராட்டி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை செவிலியர் உமா மகேஸ்வரி மற்றும் செவிலியர் சண்முகப்ரியா ஆகியோர் தொகுத்து வழங்கினர். செவிலியர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். செவிலியர் சுகுணா மற்றும் செவிலியர் ரெனிஸ் பொன்ராணி, ஆகியோர் இணைந்து செவிலியர் தின கவிதை மற்றும் சிறப்புரைகள் ஆற்றினர். மேலும் இந்நிகழ்ச்சியில் தூய மேரி செவிலியர் பயிற்சி கல்லூரி தாளாளர் பவுலின் சொர்ணலதா மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து பயிற்சி கல்லூரி மாணவ மாணவியர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இறுதியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்த அனைவருக்கும் செவிலியர் சுதா நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!