Home செய்திகள் நெல்லையில் நடந்து வரும் கண்காட்சியில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க “அம்மன் சல்லி.

நெல்லையில் நடந்து வரும் கண்காட்சியில் இடம் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க “அம்மன் சல்லி.

by mohan

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் நடந்து வரும் சிறப்பு கண்காட்சியில் வரலாற்று சிறப்பு மிக்க “அம்மன் சல்லி” இடம் பெற்றுள்ளது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் ஏப்ரல் மாத சிறப்பு காட்சிப் பொருள்- கண்காட்சி 07.04.2022 வியாழக்கிழமை துவங்கப்பட்டது. கண்காட்சியை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி துவங்கி வைத்தார். இக்கண்காட்சியில் புதுக்கோட்டை அம்மன் சல்லி காசு காட்சி படுத்தப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருட்கள் உள்ளன. ஒவ்வொரு பொருள்களும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்கவை. அத்துணை சிறப்பு மிக்க பொருள்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறும் விதமாக இதுபோன்று மாதம் ஒரு சிறப்பு கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தின் இருப்பில் உள்ள அரும் பொருட்கள் ஏதேனும் ஒன்றினை காட்சிப்படுத்தி அப்பொருளை பற்றிய விளக்கமும் வைக்கப்பட்டிருக்கும். ஒரு மாதம் முழுவதும் இந்தப் பொருள் பொதுமக்களின் பார்வைக்காக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறாக நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு பொருள்களின் முக்கியத்துவத்தை நெல்லை மாவட்ட மக்களிடையே எடுத்துச் செல்வதற்கான ஒரு முயற்சிதான் இந்த சிறப்பு கண்காட்சி. இக்கண்காட்சியில் இடம் பெற்ற அரும்பொருளான புதுக்கோட்டை அம்மன் சல்லி காசு குறித்து காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி கூறுகையில், புதுக்கோட்டை அம்மன் சல்லி அம்மன் காசு என்பது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் தொண்டைமான் மன்னர்கள் வெளியிட்ட நாணயம் ஆகும். இந்த நாணயத்தின் ஒருபுறத்தில் தொண்டைமான்களின் வழிபாட்டு தெய்வமாகிய பிரகதாம்பாளின் உருவம் இருக்கும். ஆகையால் தான் அதற்கு புதுக்கோட்டை அம்மன் காசு என்ற பெயர் ஏற்பட்டது. இக்காசை புதுக்கோட்டை அம்மன் சல்லி என்றும் அழைப்பார்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பைசாவுக்கு மூன்று அம்மன் காசுகள் சமம். இந்தக் காசை அவர்கள் பெற்ற உரிமையின் அடையாளமாக வெளியிட்டுக் கொண்டார்கள். அந்த நாட்டின் அதிபதி பிரகதாம்பாள் என்றும், அவளுடைய பிரதிநிதியாகத்தான் தொண்டைமான்கள் ஆண்டு வந்ததாக கூறிக்கொண்டனர். புதுக்கோட்டை ராஜாவின் சமஸ்தானத்தில் ‘அம்மன் காசு’ எனப்படும் சின்னஞ்சிறிய காசு செலவாணியில் இருந்தது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் புதுக்கோட்டை தொண்டமான் மன்னர்களின் குலதெய்வமான அருள்மிகு பிரகதாம்பாளின் திருவுருவம் பொறிக்கப் பட்டிருக்கும். மறு பக்கத்தில் ‘விஜய’ என்று தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கும். தசரா பண்டிகையின் போது ஏழை அந்தணர்களுக்குத் தானம் அளிக்கும் பொருட்டு இந்தக் காசு 1938-ல் அச்சடிக்கப்பட்டதாம். இது, காலணாவுக்கு ஐந்து காசுகள்; ஒரு ரூபாய்க்கு 320 காசுகள் என்ற மதிப்பில் புழக்கத்தில் இருந்தது. தசரா 10 நாள் திருவிழாவின் போது ஏழை அந்தணர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு படி அரிசியும் நான்கு அம்மன் காசுகளும் அளிக்கப்பட்டன. பழைய அரண்மனையில் நான்கு வாயில்களிலும் இப்படியான தானம் வழங்கப்பட்டன. மாலை 3 மணிக்குத் தொடங்கும் விநியோகம் 6 மணிக்கு நிறைவடையும். அதே போல், சமஸ்தான அரசுப்பணியில் இருந்த அந்தணர்களுக்கு தசரா பண்டிகையின் நிறைவில் அரிசியும் அம்மன் காசும் மொத்தமாக வழங்கப் பட்டன. இந்தக் காசை முதலில் கையால் தயாரித்து வந்தனர். அப்படிச் செய்யப்பட்ட காசுகள் சீரற்றதாக ஒரே அளவில் இல்லாமல் இருந்தன. அதனால், ஆங்கிலேயே அரசாங்கம் கொல்கத்தாவில் நடத்தி வந்த நாணய அச்சகத்தில் இந்த நாணயத்தை அச்சிட்டுத் தரும்படி சமஸ்தானம் கேட்டுக்கொண்டது. நாங்கள் அச்சிடுவது என்றால், பிரகதாம்பாளின் உருவத்துக்குப் பதில் விக்டோரியா ராணியாரின் உருவத்தைப் பொறித்துக் கொள்ள வேண்டும்’ என்று நிபந்தனை விதித்தது ஆங்கிலேய அரசு. இதை சமஸ்தானம் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர், லண்டனில் உள்ள தனியார் நிறுவனத்திடம் ஆர்டர் கொடுத்து, அம்மன் காசுகளை அச்சிட்டு வாங்கினார்களாம். 1947-ம் ஆண்டு வரை இந்தக் காசுகள் புதுக்கோட்டை மக்களிடம் புழக்கத்தில் இருந்தன. இக்காசு பற்றிய வரலாற்று தகவலை இன்றைய தலைமுறையினர் அனைவருக்கும் தெரிவிப்பதே இக்கண்காட்சியில் நோக்கமாகும் என இக் கண்காட்சியை துவங்கி வைத்த நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ. சத்திய வள்ளி தெரிவித்தார். இக்கண்காட்சியை பொதுமக்கள், மாணவ-மாணவிகள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!