தென்காசி மாவட்டத்தில் பறக்கும் படையினர் சோதனை தீவிரம்..

தென்காசி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் பொருட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் அக்டோபர் 06 மற்றும் 09 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள 10 யூனியன்களுக்கும் தலா 3 தேர்தல் பறக்கும் படையினர் வீதம் 30 தேர்தல் பறக்கும் படையினர் (FST-Flying Squad Team) நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பறக்கும் படையினர் குழுவில் காவல் துறையினர், தாசில்தார் மற்றும் வீடியோகிராபர் பணியில் இருப்பர். இவர்கள் 8 மணி நேரத்திற்கு ஒரு குழு என்ற முறையில் ஒரு நாளைக்கு 3 குழுக்களாக பணி செய்து வருகின்றனர். மேலும் தென்காசி மாவட்டத்தில் தேர்தல் குறித்த புகார்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 04633 290136 என்ற எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்