நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பாரதி நினைவு நூற்றாண்டு விழா.

நெல்லையில் பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சிகள் “பாரதி நினைவுகள்-100” என்ற தலைப்பில் செப்டம்பர் 11 மற்றும் 12 ஆகிய இரு தினங்களில் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இது குறித்து அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா ஆகியோர் கூட்டாக தெரிவித்திருப்பதாவது: “நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து பாரதியின் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சியை கடந்த ஆண்டு செப்டம்பர் 12 முதல் நேரிலும் இணைய வழியிலும் நடத்தி வந்துள்ளது. “இளைய தலைமுறையினர் பார்வையில் மகாகவி பாரதி” என்ற தலைப்பில் வாரந்தோறும் உரையரங்கமும் இணைய வழியில் நடைபெற்றது. இந்நிலையில், நெல்லை அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நூற்றாண்டின் நிறைவு நிகழ்ச்சிகளாக வருகிற 11.09.21 மற்றும் 12.09.21 ஆகிய இரு நாட்களிலும் அருங்காட்சியகத்தில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் நிகழ்ச்சியாக 11-ஆம் தேதி மாலையில் “நூறாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கிறார் பாரதி” என்ற தலைப்பில் கவிதைப் போட்டி நடைபெறுகிறது.மாலை 5.00 மணியளவில் அருங்காட்சியக திறந்த வெளி அரங்கில் நடக்கும் இக்கவிதைப் போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம். சிறப்பாக கவிதை வாசிப்போருக்கு மறுநாள் நடக்கும் நிகழ்ச்சியில் “பாரதி பைந்தமிழ்ச்சுடர் “என்ற விருதுகள் வழங்கப்படும். இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக 12 ஆம் நாளன்று காலையில் சிறப்புக் கவியரங்கமும், அதனைத் தொடர்ந்து இளம் படைப்பாளி ஒருவரின் நூல் வெளியீடும்,விருதுகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்தும் பாரதி அன்பர்கள் பலர் விருது பெற வருகை தருகிறார்கள். தொடர்ச்சியாக விருது பெற்ற கவிஞர்களுடன் எட்டையபுரம் சென்று பாரதி பிறந்த இல்லத்திலும்,மணி மண்டபத்திலும் நினைவஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா ஆகியோர் இணைந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்