24 மணி நேரமும் கோவிட்-19 தடுப்பூசி மையம் செயல்படும்; தென்காசி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்படும் என மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ஜெஸ்லின் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு தடுப்பூசி, உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின்படி, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் கோவிட்-19 தடுப்பூசி மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் உத்தரவின் படி தென்காசி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி மையம் செயல்பட்டு வருகிறது.இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்தில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி போடப்படுகிறது. அவசர சிகிச்சை பிரிவில் மாலை 5.00 முதல் மறுநாள் காலை 9.00 மணி வரை என இங்கு வருவோருக்கு 24 மணி நேரமும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி அனைவரும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் அறிவுறுத்தியுள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்