சாலை மறியலுக்காக தாலுகா அலுவலகம் முன்பு திரண்ட பொதுமக்கள்; வீ.கே.புதூரில் பரபரப்பு..

வீரகேரளம்புதூரில் தாலுகா அலுவலகம் முன்பு அரசு மருத்துவமனை கட்டிடம் கட்ட கோரிக்கை விடுத்து சாலை மறியலுக்காக பொதுமக்கள் திடீரென திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிகாரிகளின் சமாதான பேச்சு வார்த்தையை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரில் இயங்கிவந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஆட்சியின் போது, அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு,புதிய கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கான இடம் தேர்வு செய்யப்படாத நிலையில் நிதி ஒதுக்கீடு பெறப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. எனவே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தாலுகா அலுவலகம் அருகிலேயே புதிய மருத்துவமனைக்கான கட்டிடம் கட்டுவதற்கு உரிய ஏற்பாடுகளை உடனடியாக செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அனைத்து சமுதாய பொது மக்களின் சார்பில் வீரகேரளம்புதூர் தாலுகா அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று காலை வீரகேரளம்புதூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள் ஓடவில்லை. 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு சாலை மறியலுக்கு தாலுகா அலுவலகம் முன்பாக குவிந்தனர். இவர்களிடம் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் தென்காசி ஆர்டிஓ ராமச்சந்திரன் தலைமையில் சமாதான கூட்டம் நடந்தது. இதில் உடனடியாக அரசு மருத்துவமனைக்கான புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். சமாதான கூட்டத்தில் ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், வீரகேரளம்புதூர் தாசில்தார் வெங்கடேஷ், சுரண்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ், வீரகேரளம்புதூர் நவநீத கிருஷ்ணசுவாமி திருக்கோயில் நிர்வாகி சுசிலா ராணி, தென்காசி மக்கள் நல்வாழ்வு துறை இணை இயக்குனர் வட்டார சுகாதார அலுவலர் ராஜ்குமார், வீரகேரளம்புதூர் கம்யூனிஸ்ட் சங்கரன், சேனைத்தலைவர் சமுதாய தலைவர் நயினார், தேவர் சமுதாய தலைவர் பரசுராமன், கிறிஸ்தவ சமுதாய தலைவர் ஆரோக்கியசாமி, இஸ்லாமிய சமுதாய தலைவர் முஹம்மது மீரான்,முன்னாள் தாசில்தார் ஆவுடையப்பன் உட்பட அனைத்து சமுதாய நாட்டாமைகள் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுனர், விவசாயிகள், பீடி தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்