தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் மரக்கன்றுகள் மூலம் கொரோனா விழிப்புணர்வு..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எக்ஸ்னோரா அமைப்பின் மூலம் கொரோனா மற்றும் உலக தாய்ப்பால் வாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. எக்ஸ்னோரா தலைவர் டாக்டர் விஜயலட்சுமி, எக்ஸ்னோரா மாவட்ட செயலாளர் சங்கர் நாராயணன் ஆகியோரால் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள மரக்கன்றுகளும், இரும்பு கூண்டுகளும் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் அனைவரையும் வரவேற்று பேசினார். எக்ஸ்னோரா தலைவர் டாக்டர் விஜயலட்சுமி மரக்கன்று நடுதலின் அவசியத்தையும், பசுமை தோட்டத்தின் பயன்கள் பற்றியும் விரிவாக எடுத்துக் கூறி மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார். தாய்ப்பால் வார நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திய குழந்தைகள் துறைத் தலைவர் மருத்துவர் கீதா, மூத்த குழந்தைகள் மருத்துவர் ராஜேஷ் ஆகியோருக்கு மரங்கள் வளர்த்தல் பற்றிய சிடி (CD )வழங்கினார். தென்காசி அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் மரக்கன்றுகளை நட்டு அதில் இரும்பு கூண்டுகள் பொருத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் ஸ்ரீ பராசக்தி கல்லூரி ஓய்வுபெற்ற பேராசிரியை டாக்டர் கயற்கண்ணி நன்றியுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மருத்துவர்கள் ஜெரின்,அருணா, எக்ஸ்னோரா தென்காசி தலைவர்கள் ஸ்ரீநிவாசன், துரை மீனாட்சி நாதன், ராசி சுரேஷ், செவிலியர்கள் வினைதீர்த்தாள், மாலையம்மாள், சுகுணா,ஏஞ்சல் ராணி, மருந்தாளுநர் சங்கரநாராயணன், ஆய்வக நுட்புனர்கள், கணினி பணியாளர்கள் மற்றும் சுமித் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில், இது வரையில் பல மரங்களும், பூச்செடிகளும் நட்டு அதனை சிறந்த முறையில் பராமரித்து வரும் செல்லப்பாவை மருத்துவமனை கண்காணிப்பாளர் பாராட்டி கௌரவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்