Home செய்திகள் தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்…

தென்காசி மாவட்டத்தில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்…

by mohan

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 16ம் தேதி வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது என தென்காசி மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:2021 – தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 06.04.2021 அன்று நடைபெறுவதை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, சங்கரன்கோவில்(தனி), கடையநல்லூர், வாசுதேவநல்லூர்(தனி) மற்றும் ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாளர்களாக 9043 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேற்கண்டவாறு தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சுழற்சி முறையில் தேர்வு செய்யும் பணி 12.03.2021 அன்று தென்காசி இரயில் நகரில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மத்திய, மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட மேற்கண்ட ஐந்து சட்டமன்ற தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு தென்காசி சட்டமன்ற தொகுதிக்கு குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளீர் கல்லூரியிலும், சங்கரன்கோவில் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு சங்கரன்கோவில் நகரம் ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், வாசுதேவநல்லூர் (தனி) சட்டமன்ற தொகுதிக்கு புளியங்குடி சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ள வீராசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியிலும், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு ஆய்க்குடி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீராம் நல்லமணியாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அத்தியூத்தில் அமைந்துள்ள சர்தார் ராஜா பொறியியல் கல்லூரியிலும் 16.03.2021 அன்று காலை 10 மணி மற்றும் மதியம் 2 மணிக்கும் நடைபெற உள்ளது. மேற்படி பயிற்சி வகுப்புக்கான ஆணை சம்பந்தப்பட்ட உயர் அலுவலர்கள் மூலம் அனைத்து தேர்தல் பணியாளர்களுக்கும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புக்கான ஆணை பெற்றுக்கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பயிற்சி வகுப்பில் தவறாமல் கலந்து கொண்டு சிறந்த முறையில் தேர்தல் பணியாற்றிட முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com