
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் மாநில அளவிலான முழு நாள் தொல்லியல் பயிலரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.இதில், தமிழ் வளர்த்த மண்” நெல்லைக்கு கிடைத்த பெருமை என தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பேசினார்.நெல்லை அரசு அருங்காட்சியகமும் வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையமும் இணைந்து நடத்திய இப்பயிலரங்கத்திற்கு நெல்லை மண்டில தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன் தலைமை வகித்தார். தலைமையுரையில் “தமிழ் வளர்த்த மண் என்பது இந்த நெல்லைப் பகுதிக்கு பெருமையாகும். இலக்கிய கர்த்தாக்களும் நிறைந்த மாவட்டம் நெல்லை மாவட்டமாகும். சுதந்திர வீரர்களை விளைவித்த களமாகவும் நெல்லை மண் சிறந்து விளங்கியது. தமிழ்ப் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் தொல்லியல் எச்சங்களும் நெல்லையைச் சுற்றி நிறைய உள்ளன. இப்படிப்பட்ட பெருமைகள் மிகுந்த இப்பகுதியின் தொல்லியல் எச்சங்களையும், விழுமியங்களையும் காக்க வேண்டியது நமது கடமை “என துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன் தெரிவித்தார். நிகழ்ச்சியில், தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர் பேரா சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், கடந்த ஆண்டு ஐனவரி 5-ஆம் நாளில் இதே அரசு அருங்காட்சியகத்தில் நடந்த பண்பாட்டு கருத்தரங்க நிகழ்வினை நினைவு கூர்ந்தார். நிகழ்ச்சியில், அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி கருத்தரங்க உரை நிகழ்த்தி பயிலரங்கினைத் தொடங்கி வைத்தார்.அவர் பேசும்போது “இன்றைக்கு இருக்கும் தமிழ் பண்பாட்டு, கலாச்சார எச்சங்களை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய சமூக அக்கறை நமக்கு உள்ளது. அருங்காட்சியகம் என்பது வரலாற்றுத் தொன்மங்களையும், ஆவணங்களையும் பக்குவமாகப் பாதுகாத்து நாளைய சமுதாயம் பார்த்து பெருமைப்பட வைக்கும் அரிய பொக்கிஷமாகத் திகழும் பண்பாட்டு மையம் “எனச் சொன்னார்.தொடர்ந்து நடந்த முதல் அமர்வுக்கு தெற்கு கள்ளிகுளம், திருநெல்வேலி தெஷ்ணமாற நாடார் சங்கக் கல்லூரி தமிழ்த் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் தி.கலைச்செல்வி தலைமை தாங்கினார். “தென்காசி மாவட்டத் தொல்லியல் எச்சங்கள் “என்ற தலைப்பில் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியின் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் செ.கல்யாணி கருத்துரை வழங்கினார். மதிய உணவிற்குப் பின் தொடங்கிய இரண்டாவது அமர்வில் பாளையங்கோட்டை சாராள் தக்கர் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் அ. வளர்மதி தலைமையில், தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ம.ஜோசப்ராஜ் திருநெல்வேலி மாவட்ட தொல்லியல் எச்சங்கள் என்ற தலைப்பில் பேசினார். மூன்றாம் அமர்வுக்கு திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் இ. மாரியப்பன் தலைமை தாங்க, விருது நகர் வே.வ.வன்னியப் பெருமாள் கல்லூரியின் வரலாற்றுத் துறைத் தலைவர் முனைவர் செ.மனோரஞ்சிதமணி தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் எச்சங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக நடந்த நிறைவு நிகழ்ச்சியில் பயிலரங்கில் கலந்து உரையாற்றிய பேராசிரியர்கள் மற்றும் பங்கேற்ற கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா சான்றிதழ்களை வழங்கினார். அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி நன்றி கூறினார். முன்னதாக கவிஞர் சுப்பையா தமிழ்த் தாய் வாழ்த்து பாடினார். மாணவன் சூர்யா வரவேற்புரை நிகழ்த்தினார். பயிலரங்கில் கலையாசிரியர் சொர்ணம், திருக்குறள் முருகன் உட்பட ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.