Home செய்திகள் நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா;வணிக நிறுவன பெயர் பலகைகள் தமிழில் அமைத்திட வலியுறுத்தல்..

நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா;வணிக நிறுவன பெயர் பலகைகள் தமிழில் அமைத்திட வலியுறுத்தல்..

by mohan

நெல்லையில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா கொண்டாடப்பட்டது. வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகள் தமிழில் அமைத்திட வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள்,வாகன ஒட்டுத்தாள்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 23-12-2020 இன்று முதல் 29-12-2020 முடிய தமிழ் மொழியின் சிறப்பை உலகறியச்செய்யும் வகையில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் கடந்த ஆண்டு சட்டபேரவையில் அறிவித்தமைக்கிணங்க ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகள், தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அரசு அருங்காட்சியகம் பங்கு பெற்ற ஆட்சிமொழி சட்ட வார நிகழ்வு இன்று காலை (23-12-2020) தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு நெல்லை மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன் தலைமை வகித்தார். பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா முன்னிலை வகித்தார். அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் தலைமையுரை வழங்கிய துணை இயக்குநர் கா. பொ.இராசேந்திரன் பேசும்போது,”இந்த நிகழ்ச்சி ஒருவார காலம் நடைபெறும். தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தமிழக சட்டப் பேரவையில் இயற்றப்பட்டு 27-12-1957 முதல் செயல் பாட்டுக்கு வந்தது. அதன்படி தமிழ் ஆட்சிமொழியாக அரியணையேறியது. அன்று முதல் அரசு அலுவலகங்களில் அனைத்து அலுவல் நடவடிக்கைகளும் தமிழில் தான் நடைபெற வேண்டுமென ஆணையிடப்பட்டது. அன்னைத் தமிழாம் ஆட்சிமொழியாக அறிவிக்கப்பட்ட இந்நாளினை தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் ஆட்சிமொழி வாரமாக கொண்டாடி வருகிறது. அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனில் அம்மக்கள் பேசுகிற மொழியில் நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்”எனக் குறிப்பிட்டார். முன்னிலையுரை வழங்கி கவிஞர் பேரா பேசியதாவது,” சேமமுற வேண்டுமெனில் தெருவெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் சொன்ன மகாகவி பாரதியாரின் ஆணையேற்று ,எங்கு காணினும் தமிழடா என்ற நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்த்தெருவில் தமிழ்தான் இல்லை என்ற புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கனவை நிறைவேற்றிட வேண்டும். அந்த வகையில் தமிழ் நாட்டிலுள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளையும் முழுவதும் தமிழில் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் அமைப்புகள் மூலம் கடைகள் வணிக நிறுவனங்களில் துண்டு அறிக்கைகள் வழங்குதல், வாகனங்களில் தமிழ் முழக்க ஒட்டுத் தாள்கள் ஒட்டுதல் போன்ற விழிப்புணர்வு தொடர்ந்து ஒருவார காலம் தமிழ் வளர்ச்சித் துறையால் பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்ற நிழ்ச்சிகளை நடத்திடும் தமிழ் வளர்ச்சித் துறையின் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு நாம் வழங்கிட வேண்டும் “எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் சிறப்புரை வழங்கிய மாவட்டக் காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தன் உரையில்,” அன்னைத் தமிழை அகிலமெங்கும் பரப்பிட தமிழக அரசின் செயல்களையும், திட்டங்களையும் நாம் அறிவோம். அலுவலகங்களில் கோப்புகளைத் தமிழில் எழுதிடவும், ஆட்சிமொழியில் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அமைத்திடுமாறும், இந்த ஆட்சிமொழி சட்டவார நிகழ்வின் மூலம் பரப்புரை செய்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தமிழ் வளர்ச்சித்துறை ஒரு வார காலத்திற்கு நடத்துகிறது.நாம் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்குவோம் “எனக் குறிப்பிட்டார். நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், அருங்காட்சியக பணியாளர்கள், பொதிகைத் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள், அகவை முதிர்ந்த தமிழ் அறிஞர்கள் ,கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். நிறைவாக தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன் தலைமையில் வாகனங்கள், வணிக நிறுவனங்களில் ஒட்டுத் தாள் ஒட்டும் பணியும், துண்டு பிரசுரங்கள் வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com