ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதை தற்கொலைக்கு முயற்சித்தது ஏன்?..

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை திடீரென தற்கொலைக்கு முயற்சித்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திடீரென கட்சியினரால் மன அழுத்தத்துக்குள்ளாகி பூங்கோதை எம்எல்ஏ பாதிக்கப்பட்டிருப்பது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா ஆலங்குளம் தொகுதியில் இருந்து, 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் ஆலங்குளம் தொகுதியில் இருந்து திரும்பவும் எம்எல்ஏவானார். தற்போதும் திமுகவில் தீவிரமாக சுழன்று வேலை பார்த்து வருபவர். இந்நிலையில், உட்கட்சி பூசல் காரணமாக அவமரியாதை செய்யப்பட்ட நிலையில் தற்கொலைக்கு முயன்ற திமுக எம்எல்ஏ பூங்கோதை உடல் நல பாதிப்பு காரணமாக நெல்லை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.அண்மையில் கட்சியில் நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர் விவகாரத்தால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்திருக்கிறார் எம்எல்ஏ பூங்கோதை. குறிப்பாக கடையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பூங்கோதை அவமரியாதை செய்யப்பட்டதாக தெரிகிறது. இதன் பின் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே பூங்கோதை தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்