
சுரண்டை இலந்தை குளத்துக் கரையில் விபத்துகளைத் தடுக்கும் பொருட்டு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து வீகேபுதூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது இலந்தைகுளம். கடந்த 6 மாதத்திற்கு முன்பு சாலைகளை அகலப் படுத்துவதற்காக குளத்துக்கரையில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி புதியதாக தார்சாலை போடப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட சாலை விசாலமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் வேகமாக செல்கின்றனர்.தினமும் இந்த சாலையில் வரும் வாகனங்களை தவிர புதியதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள வளைவு தெரிவதில்லை. சாலையின் ஓரத்தில் ஆபத்தான வளைவு பகுதி என்றோ,குளம் உள்ளது என்ற அறிவிப்பு பலகை ஏதும் இல்லாததால் வேகமாக செல்லும் வாகன ஓட்டிகள் திடீரென பிரேக் பிடித்து வாகனத்தை நிறுத்தி பின்பு திரும்புவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் குளத்துக்குள் விழுந்து எழுந்து செல்வதும் வாடிக்கையாக உள்ளது. குளத்தில் தண்ணீர் இல்லாததால் அதிஸ்டவசமாக சிறிய காயங்களுடன் தப்பி வருகின்றனர். எனவே இலந்தை குளத்துக்கரையில் உடனடியாக அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். மேலும் குளத்துக்கரையில் சாலையை அகலப்படுத்தி தடுப்பு சுவர் அமைத்து,புதிதாக மரங்களை நட்டு பராமரிக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
You must be logged in to post a comment.