மத்திய அரசின் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்ப்பதால் திமுக மீது விமர்சனம்- சுரண்டையில் நடந்த நலத்திட்ட விழாவில் கனிமொழி எம்பி பேச்சு..

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத  திட்டங்களை எதிர்த்து இந்தியாவில் முதலில் குரல் எழுப்பும் இயக்கமாக திமுக இருப்பதால் திமுக மீது விமர்சனங்கள் செய்யப்படுவதாக  கனிமொழி எம்.பி.தெரிவித்தார்.தென்காசி மாவட்டம் சுரண்டையில் திமுக ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நினைவாலயத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் அனைவரையும் வரவேற்றார். கனிமொழி எம்பி கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து சுரண்டையில் அமைக்கப்பட்ட கலைஞர் நினைவாலயத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திவிட்டு 97 கர்ப்பிணிப் பெண்கள்,100 விவசாயிகள்,வேன் ஸ்டாண்ட் ஓட்டுநர்கள் ஆகியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஏழைப் பெண்களுக்கு நிலைக்கதவு, பால் முகவர்களுக்கு பால்கேன்,கல்வியில் சிறந்த மாணவர்களை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார். கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வருவாய் அலுவலர்கள்,துப்புரவு பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், டாக்டர்கள் ஆகியோருக்கு பதக்கங்களை வழங்கி மரியாதை செய்தார்.நினைவாலயம் அமைக்க இடம் வழங்கிய தொழிலதிபர் முருகேச பாரதிக்கு நினைவு பரிசை வழங்கி கௌரவப்படுத்தினார்.மேலும் சிறப்பாக மக்கள் பணியாற்றும் கனிமொழி‌ எம்.பி.க்கு சுரண்டை மருத்துவர்கள் சார்பில் விருது வழங்கப்பட்டது.

கொரோனா காலத்தில் தென்காசி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட பொறுப்பாளர் வக்கீல் சிவ பத்மநாதன், ஒன்றிய செயலாளர் ஜெயபாலன் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கினார். தொடர்ந்து திமுகவினர் இதுபோல் நலத் திட்ட உதவிகளை வழங்குவார்கள் என தெரிவித்தார்.தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்த திமுக எம்பி கனிமொழி மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசை எதிர்த்து இந்தியாவில் எழுப்பப்படும் முதல் குரலாக திமுகவின் குரல் இருக்கும்‌ என்றார்.மக்கள் விரோத திட்டங்களை எதிர்ப்பதால் தான் மத்திய மக்கள் விரோத  பாஜக அரசு திமுக மீது பல்வேறு விமர்சனங்களை வைக்கின்றனர்.திமுக எதிர்க்கட்சியாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது இந்த ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து திமுக நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும் என்றார்.

மேலும் தமிழக அரசு கொரோனாவை காரணம் காட்டி மக்கள் பணத்தை விரையம் செய்கின்றனர். அதனால் மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வதில்லை என கூறினார்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஆறுமுகசாமி, சங்கர நயினார், ஒன்றிய செயலாளர் அன்பழகன், சிறுபான்மை பிரிவு வீராணம் சேக் முகமது,  அன்னப்பிரகாசம், சாம்பவர் வடகரை மாறன், இளைஞரணி முத்து, பிரேம்குமார், கொடி கோபாலகிருஷ்ணன், மனோகர், அரவிந்த் சிதம்பரம், கணேசன், சசிகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..