சுரண்டை,சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரிக்கும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சம்-சிறப்பு முகாம்கள் நடத்த கோரிக்கை

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.சென்னையை தொடர்ந்து தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தற்போது கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் என பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சுரண்டை மற்றும் சுற்று பகுதியில் உள்ள கிராமங்களான வீ.கே.புதூர், கழுநீர்குளம், சேர்ந்தமரம், இரட்டைகுளம்,  ஆனைகுளம், இடையர்தவணை, வெள்ளகால், அதிகசயபுரம், ராஜகோபாலபேரி, பொய்கை, சாம்பவர்வடகரை,  சுந்தரபாண்டியபுரம்,  உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஐம்பதை கடந்தது.

இரண்டு பெண் காவலருக்கு ஏற்பட்ட தொற்றால் சாம்பவர் வடகரை மற்றும் சேர்ந்தமரம் காவல் நிலையம் கிருமி நாசினி தெளித்து மூடப்பட்டது.இந்த நிலையில் நெல்லை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊரடங்கு காலத்தில் தனது சொந்த செலவில் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்து கொண்டு ரூ 20 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பில் பொது மக்களுக்கு, அரிசி, பருப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் எஸ்.பழனி நாடார் வழங்கினார். மேலும் ஆர்ப்பாட்டம், காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் இல்ல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதால் தானாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை தொற்று உறுதி செய்யப்பட்டதால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு தொற்றுக்கான எந்த அறிகுறியும் இல்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சுரண்டை திரும்பிய எஸ்.பழனி நாடார் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். மேலும் கட்சி நிர்வாகிகள் தங்களது உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார். காங்கிரஸ் கட்சி தனது நலத்திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்றார்.ஏற்கனவே தொற்று அதிகமாக பரவியுள்ள நிலையில் எந்தவிதமான அறிகுறியும் இல்லாமல் தொற்றுக்கு ஆளானதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் முக்கிய அரசியல் பிரமுகருக்கு மருத்துவமனையில் அனுமதி வழங்கப்படாத நிலையில் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு இந்த அரசு எவ்வாறு சிகிச்சை அளிக்கும்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டால் மருந்தே இல்லாத இந்த நோய்க்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் என்பதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

கொரோனா தொற்றை  கட்டுப்படுத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் தமிழக அரசு தோல்வியடைந்ததாக  எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.இந்நிலையில் சுரண்டை பகுதியில் கொரோனா ஆரம்ப கட்ட அறிகுறிகள் கண்டறியும் மருத்துவ முகாம்களை அதிக அளவில் நடந்த வேண்டும் எனவும்,கொரோனாவை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

உதவிக்கரம் நீட்டுங்கள்..