கீழக்கரை நகராட்சியின் தீவிர நோய் தடுப்பு முயற்சிகள் – நிலவேம்பு கசாயம் வழங்குதல், கொசு மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்

கீழக்கரை நகராட்சி பகுதிகளில் மலேரியா, டெங்கு காய்ச்சல் என தலா குடும்பத்திற்கு ஒருவர் பாதிக்கப்பட்டு, இராமநாதபுரம் மற்றும் மதுரையில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கீழக்கரை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரரின் அறிவுறுத்தலின்பேரில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஹாஜா, சக்தி, மனோகரன் தலைமையில் 8 வது வார்டு பழைய குத்பா பள்ளிவாசல் பகுதி, கிழக்குத் தெரு பாத்திமா காலனி பகுதி, பெத்தரி தெரு, கஸ்டம்ஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று, சுகாதாரம் குறித்து ஆய்வு செய்து கொசு மருந்து தெளித்து வருகின்றனர்.

அதே போல் கீழக்கரை நகராட்சி சார்பாக மஹ்தூமியா மேல் நிலை பள்ளி வாயிலில் நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து நகரின் அனைத்து பகுதிகளுக்கும் கொசு மருந்து புகை அடித்தல், திரவ மருந்து தெளித்தல், நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்றவற்றை துரிதபடுத்துவதோடு நகரின் பல்வேறு பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் குப்பை மேடுகளையும், ஆறாய் ஓடும் சாக்கடை நதிகளையும் ஒழிக்க நகராட்சி நிர்வாகத்தினர் முன் வர வேண்டும் என்பது அனைத்து சமுதாய பொதுமக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.