இராமநாதபுரம் நகராட்சியில் ரூ.10 கோடியில் சாலைகள்..

இராமநாதபுரம் வண்டிக்காரத்தெரு, வடக்கு தெரு 4 இடங்களில் சாலை மேம்பாட்டு பணிகளை  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் துவக்கி வைத்தார். இதன் பிறகு அவர் கூறியதாவது: தமிழக அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் படி, ராமநாதபுரம் நகராட்சி 33 வார்டுகளில் சேதமான சாலைகளை தமிழ்நாடு நகர்ப்புற சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலை மேம்படுத்துவதற்காக 5 சிப்பங்களாக ரூ.10 கோடி மதிப்பில் 15.48 கி.மீ நீள சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இச்சாலை மேம்பாட்டு பணிகளை  துவக்கும் பூமி பூஜை நடந்தது.

இராமநாதபுரம் நகர் பிரதான சாலை அச்சுந்தன்வயல் முதல்  பட்டணம்காத்தான் வரை சாலையை ரூ.34 கோடி மதிப்பில் மேம்படுத்த ஒப்பந்தப்புள்ளி  கோரும் பணி நிறைவடைந்துள்ளன. விரைவில் பணிகள் துவங்கப்படும். இராமநாதபுரம் நகராட்சி சிதம்பரம் பிள்ளை ஊரணியில் மக்கள் நலனுக்காக சட்டமன்ற  உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.54 லட்சம் மதிப்பில் ஊரணி வடக்கு  கரையில் சுற்றுச்சுவர், பேவர் பிளாக் கற்கள் பதித்த நடைபாதை  போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மக்கள்  பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திருப்புல்லாணி ஒன்றியம் ஆர்.எஸ்.மடை கிராமத்தில் நடந்த பூமி பூஜையில் திருப்புல்லாணி, மண்டபம், ராமநாதபுரம் ஊராட்சி  ஒன்றியகளுக்குட்பட்ட சாலைகளை கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணிகளை துவக்கி வைத்தார்.இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார், உதவி பொறியாளர் சுப்ரமணிய பாபு, ஒப்பந்தகாரர்கள் பால்ராஜ், முனியசாமி, ஜீவானந்தம், திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்