Home செய்திகள் முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”

முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”

by Askar

“முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?” திரைப்பட நட்சத்திர இயக்குனரின் மகன் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அடிபதித்து, தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு, இளம் தலைமுறையினரின் மனதில் “இளைய தளபதி”, “தளபதி” என “விஸ்வரூபம்” எடுத்தவர், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயரிலேயே மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் தொய்வின்றி செய்து வந்த நிலையில் தற்போதைய சூழலில் தமிழ்நாட்டில் முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர வேண்டுமானால் ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் என்பதையும், அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே அதற்கான பணிகளை இன்னும் சிறப்பாக செயல்படுத்த முடியும் என்பதை புரிந்து கொண்ட நடிகர் விஜய் அவர்கள் தற்போது “தமிழக வெற்றிக் கழகம்” எனும் பெயரில் அரசியல் கட்சி தொடங்குவதற்கான பணிகளை முன்னெடுத்து அறிவித்துள்ளதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்று அவரது நல்லெண்ணம் வெற்றி பெற அவருக்கும், அவரது குழுவினருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே நடைபெற்ற ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் பல்வேறு மாவட்டங்களில் சுயேட்சையாகவே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது விஜய் மக்கள் மன்றம் அரசியல் கட்சியாக பரிணாம வளர்ச்சி அடைந்தாலும் கூட உடனடியாக தேர்தல் அரசியலை முன்னெடுக்காமல் எதிர்வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, அதே சமயம் அந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவளிக்கவும் போவதில்லை எனவும், 2026ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு எனவும் தெரிவித்துள்ள அவரது முடிவையும், தன்னம்பிக்கையையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார வரவேற்கிறது.

மேலும் அரசியல் என்பது நடிப்பைப் போல மற்றொரு தொழில் அல்ல, அது ஒரு புனிதமான மக்கள் பணி என்பதை உணர்ந்து கொண்டு, அரசியலின் அடிப்படை விசயங்களை முன்னோர் பலரிடமிருந்து கற்று, அதற்காக மனதளவில் தன்னை பக்குவப்படுத்தி, தயாராகி கொண்டு வருவதாகவும், “அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது ஆழமான வேட்கை”, அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ளவே விரும்புகிறேன் எனவும், தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ள அவரது முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

தமிழ்நாட்டை ஆண்ட, ஆளுகின்ற கழகங்களால் அரசியல் என்பது சாக்கடையாகிப் போனதோடு, ஊழல் கழகங்களின் முதுகில் சவாரி செய்யும் கட்சிகளால் அரசியல் வருவாய் ஈட்டும் தொழிலாகவே மாறிப் போன நிலையில் தமிழ்நாட்டில் உள்ள இரண்டு ஊழல் கழகங்களுக்கும் மாற்றாக கடந்த 2018ல் நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் மக்கள் நீதி மய்யம் என்கிற பெயரில் அரசியல் கட்சி கண்ட போது அதனை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் முழு மனதோடு வரவேற்றது. அத்துடன் ஊழல் கழகங்களுக்கு மாற்றாக, மாற்றத்திற்கான விதையாக மய்யம் இருக்கும் என்கிற நம்பிக்கையிலும், வருமானம் இல்லாமல் முழுநேர அரசியல் என்பது ஊழலுக்கே வழிவகுக்கும் என்பதாலும் மய்யத்தின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்தும் வந்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் பகுதி நேர அரசியல், சமூக வலைதள அரசியல் என்பதெல்லாம் சம்பந்தப்பட்ட கட்சியையும், அதன் தலைமையையும் மக்களிடையே கொண்டு போய் சேர்க்காது என்பதையும், மக்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சி மீதும், அதன் தலைமை மீதும் நம்பிக்கை வராமல் அவநம்பிக்கையே ஏற்படும் என்பதையும், அதனால் கட்சியினரின் உழைப்பு விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகிப் போய் வெற்றிக் கனியை பறிப்பது என்பது இயலாத காரியமாகி அதுவே ஊழல் கழகங்களுக்கு சாதகமாகிப் போகும் என்பதையும் காலம் உணர்த்தியது.

இந்த நிலையில் புதியதாக அரசியல் களம் காண இருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது கைவசம் உள்ள திரைப்படங்களின் பணிகளை முடித்துக் கொடுத்து விட்டு அரசியல் களத்தில் முழுமையாக களமாடப் போகிறார் என்பது நிச்சயமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைத்து அவருக்கு வெற்றிக் கனியை தமிழ்நாடு பரிசளிக்கும் என்பதையும், அவர் கொடுத்த வாக்குறுதியை கடைபிடிக்காமல் போனால் இதுவரை தமிழ்நாட்டில் உருவாகி கரைந்து, காணாமல் போன கட்சிகளின் பட்டியலில் இடம்பெற நேரிடும் என்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் அவருக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது.

மேலும் நடிகர்கள் அரசியலுக்கு வரலாமா..? நடிகரால் சாதிக்க முடியுமா..? என எதிர்மறையான வினாக்களும், விமர்சனங்களும் எழுந்தாலும் கூட வருவாய்க்கான பல்வேறு தொழில்கள், பணிகளைப் போல நடிப்பும் வருவாய்க்கான தொழில், பணி என்பதால் அதில் கிடைத்த அடையாளத்தையும், திரைப்பட உச்ச நட்சத்திரம் என்கிற வெளிச்சத்தோடும், மக்கள் நலனிற்காக கிராமங்கள், நகரங்கள் தோறும் முழுநேர நேரடி அரசியலை நடிகர் விஜய் அவர்கள் மேற்கொண்டு கட்சியின் கட்டமைப்பை ஆழ உழுது, ஊழல் கழகங்களோடு விலகி நின்று நேர்மையான அரசியலை கடைபிடிப்பாரேயானால் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாகவே வெற்றி பெற்றதைப் போல் தமிழக வெற்றி கழகமும் பெருவாரியாக வெற்றி பெற்று ஊழல் கழகங்களுக்கு மாற்றாக திகழ அனைத்து வாய்ப்புகளும் தமிழ்நாட்டில் பிரகாசமாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மையாகும்.

நன்றி

சு.ஆ.பொன்னுசாமி நிறுவனத் தலைவர் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!