ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் மக்கள் பிரதிநிதிகளின் உறவினர்கள் நிர்வாக விஷயங்களில் தலையிடுவதைக் கண்காணிக்க குழு:ஆட்சியர்.

மதுரை மாவட்டத்தில் மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய அனைத்து பதிவுகளுக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் முடிவுற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் பதவியேற்று உள்ளாட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும், சில ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் பல கிராம ஊராட்சி நிர்வாகத்தில் ஆங்காங்கே நடைபெறுவதாக தெரியவருகின்ற ஒரு சில நிகழ்வுகள் ஊராட்சி நிர்வாகத்திற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் சிறப்பு சேர்ப்பதாக இல்லை.உள்ளாட்சி அமைப்புகளின் மாண்பினை கெடுப்பதாக உள்ளது.இன்றைய நிலவரப்படி, மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அனுமதிக்கப் பட்டுள்ள பதவிகளில், 50 சதவீதத்துக்கு அதிகமானோர் பெண் பிரதிநிதிகளாக உள்ளனர்.தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் உறுப்பினர்களின் அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இதில், கிராம ஊராட்சி நிர்வாகத்தைப் பொறுத்தமட்டில் ஊராட்சியின் தலைவர் என்பவர் அந்த கிராம ஊராட்சியின் செயல் அலுவலர் என்ற பொறுப்பையும் கவனித்துவர அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊராட்சியின் நிதி நிர்வாக செயல்பாடுகளில் நேரடியாக தலையிட அதிகாரமளிக்கப் பட்டுள்ளது. மாவட்ட ஊராட்சி மற்றும் வட்டார ஊராட்சியின் தலைவர்களுக்கு இதுபோன்ற அதிகாரம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இவ்வாறான நிலையில்,சில ஊராட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் கணவர், மகன் சகோதரர் , தந்தை அல்லது இதர உறவினர்கள் கிராம ஊராட்சி நிர்வாகத்தில் அதிக அளவில் குறுக்கீடு செய்வதாக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தொடர்ந்து புகார் வருகின்றது. குறிப்பாக, நிதி நிர்வாகத்தில் கூட நேரடியாக தலையிடுவதாகவும் புகார் வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் சட்டத்திற்குபுறம்பானவை என்பதோடு, அல்லாமல் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது சட்டத்திருத்தம் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ன்படி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ள சுய அதிகார பகிர்வுகளை அவமதிப்பதும், அவைகளை மீறி செயல்படுவதாகும்.எனவே, இனி வருங்காலங்களில் மேற்காணும் அறிவுரைகள், விதிமுறைகள மீறி மூன்றடுக்கு ஊராட்சி நிர்வாகத்தில் பெண் பிரதிநிதிகளின் கணவர் மற்றும் இதர உறவினர்கள் கலந்துகொண்டதாக நிரூபிக்கப்படும் ஊராட்சி கூட்டங்கள் மற்றும் இதர குழு கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை முறைகேடான தீர்மானமாக கருதி தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 202-ல் ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சித்தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்படும். இதுபோன்ற, முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுமேயானால் ,அதற்கு இடமளிக்கும் பெண் பிரதிநிதிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்டும்.இதனைக் கண்காணிக்க, கிராம ஊராட்சிகளுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலரும் ,வட்டார ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலரும் (வ.ஊ) மாவட்ட ஊராட்சிக்கு மாவட்ட ஊராட்சி செயலரும் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனர் என , மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , தெரிவித்தார்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்