கோவில்கள் மூடப்பட்ட நிலையில், திருப்பரங்குன்ற கோவில் வாசலில் நடைபெறும் திருமணங்கள்.

மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வெள்ளிக்கிழமையான இன்று ஆவணி முதல் முகூர்த்த நாள் என்பதால் 40 க்கும் மேற்பட்ட திருமணங்கள் கோவில் வாசல் முன்பு உற்றார், உறவினர் முன்னிலையில் திருமணம் நடைபெற்று வருகின்றது.முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆவணி மாத முதல் முகூர்த்த தினமான ஆவணி மூன்றாம் தேதியான இன்று ஏராளமான திருமண ஜோடிகள் கோவில் வாசல் முன்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் மறு அறிவிப்பு வரும் வரை கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்திற்கும் வழிபாடு நடத்த அனுமதி இல்லை என அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இந்த நிலையில் ஆடி மாதம் முழுவதும் கோவில்களுக்கு பிரசித்தி பெற்ற நாட்கள் என்பதால் கடந்த மாதத்தில் எந்த ஒரு திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளும் நடைபெறாமல் இருந்தது. ஆவணி முதல் முகூர்த்தமும் வெள்ளிக்கிழமையான இன்று கோவில்கள் திறக்கப்படாத நிலையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஏராளமான புது ஜோடிகள் கோவில் வாசலில் தற்போது வரை 40க்கும் மேற்பட்ட திருமணம் செய்துகொண்டார். மேலும் 20க்கும் மேற்பட்ட ஜோடிகள் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளனர்.அதிக அளவில் திருமண ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் குடும்பத்தினர் இருப்பதால் சமூக இடைவெளி துளியும் கடைபிடிக்காமல் அதிக அளவு கூட்டம் இருந்து வருகிறது.நோய் பரவலை கட்டுப்படுத்த திருப்பரங்குன்றம் காவல்துறையினர் ஒலிபெருக்கி வாயிலாக தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். நான்கு வீதிகளிலும் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் உள்ளே சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக போக்குவரத்து சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு திருமண ஜோடிகளுக்கும் பத்து நிமிடம் மட்டுமே கோவில் வாசலில் நின்று திருமணம் செய்துகொள்ள போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்