
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் தனபால், அலங்காநல்லூர் பேருந்து நிலைய பகுதியில் பருத்திப்பால் வியாபாரம் செய்து வருகிறார். தனது சொற்ப வருமானத்தில் மகன் அஜித்குமாரை பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். ஆனால் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திடீரென இருசக்கரவாகன விபத்தில் சிக்கியதால் மகனின் 6ம் வகுப்பு படிப்பு நிறுத்தபட்டது.கணவர் கால் ஊனமாகி படுத்ததால், அஜித்குமாரின் தாய் தானே பருத்திப்பால் விற்று மருந்து மற்றும் குடும்ப செலவுகளை கவனித்து வந்தார்.இதனையறிந்த பள்ளி ஆசிரியர் இவர்களின் குடும்ப வறுமையறிந்து, அஜித்குமாரின்படிப்பு செலவை தானே ஏற்றுகொண்டதால், +2 வரை தடையின்றி படிப்பை முடித்தார். இதனிடையே இரண்டு மாதங்களுக்கு முன் அஜித்குமாரின் தாயும் விபத்தில் சிக்கி உடல் நலம் குன்றியதால் குடும்பம் வறுமையில் சிக்கி தவிக்கிறது. இருப்பினும் தொடர்ந்து கல்லூரியில் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தில் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு சேர்ந்தார்.இந்நிலையில் கொரோனா காலத்தில் வியாபாரமின்றி முடங்கி போனதால், மகனுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தனபால் கூறுகிறார். தற்போது மாணவர் அஜித்குமார் தன் கல்லூரி படிப்பை தொடர முடியாமல், கால் ஊனமான, தன் தந்தைக்கு உதவியாக 3 கி.மீ தூரத்தில் உள்ள அலங்காநல்லூருக்கு வண்டியை தள்ளி சென்று பருத்தி பால் விற்று வருகிறார். மேலும் தன் குடும்பத்தின் வறுமை நிலையறிந்து தொண்டுள்ளம் படைத்த யாராவது, தன் மகன் கல்லூரி படிப்பை தொடர உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் தனபால்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.