திமுக அமைச்சர்கள் வாய்ச் சொல்வீரர்களாக இருப்பதை கைவிட்டால் நாட்டுக்கு நல்லது : ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.

தற்போது ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எப்போதும் போல இப்போதும், அதாவது நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது எங்கள் அரசின் மீது அவதூறு பரப்பியது, புழுதி வாரித் தூற்றியது, வீன் பழி சுமத்தியது, கோயபல்ஸ் பிரச்சாரங்களை கையில் எடுத்தது போல இப்போதும் அதையே செய்து கொண்டு இருந்தால், அது மக்களுக்கு எந்தப் பலனையும் தரப் போவது இல்லை”, என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி.குன்னத்தூர் ஜெயலலிதா கோவில் வாயிலில் நடைபெற்ற அதிமுக உரிமை முழக்கப் போராட்ட முடிவில், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், “திமுக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிற வேளையில், மக்கள் நலன் சார்ந்த அவர்களது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்துவது எதிர்க்கட்சியினராகிய எங்களது கடமை.ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை நம்பிய லட்சக்கணக்கான இன்றைய இளைய தலைமுறையினர் தற்போது வழிகாட்டுதல் எதுவும் இன்றி தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் துரோகம் செய்து இருக்கிற திமுக அரசு, நீட் தேர்வை ரத்து செய்வதற்கு எடுக்கப்பட்டு இருக்கிற முயற்சிகள் மாணவர் சமுதாயத்திற்குப் பலனளிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.விண்ணை முட்டுகிற அளவிலே உயர்ந்து வருகிற விலைவாசிக்கு அடிப்படைக் காரணமாக இருக்கிற பெட்ரோல், டீசலுக்கு மானியம் தருவதாகச் சொன்னதும் காற்றிலே பறக்கவிடப்பட்டு இருக்கிறது. தாய்மார்கள் குடும்ப சுமையைக் குறைக்கிற வகையிலே, திமுக ஆட்சிக்கு வந்தால் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று சொன்னதும், காற்றிலே பறக்க விட இருக்கிற சூழ்நிலையாக இருக்கிறது.

இதையெல்லாம் அரசினுடைய கவனத்திற்கு கொண்டு வருகிற பொறுப்போடும் கடமையோடும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் பல்வேறு நினைவூட்டல்களை மேற்கொண்ட நிலையில், தங்களை எதிர்த்து எந்தக் குரலும் எழும்பக் கூடாது என்பதற்காக, இன்றைக்கு எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெறிக்கின்ற ஜனநாயகப் படு கொலை நடவடிக்கைகளிலே, குறிப்பாக பழிவாங்குகிற நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை வைக்கும் போதெல்லாம் நீங்கள் உங்கள் ஆட்சியில் என்ன செய்தீர்கள்? எனக் கேட்பதே வாடிக்கையாக இருக்கிறது. மக்களுக்கு நாங்கள் செய்த நலன் சார்ந்த திட்டங்களுக்காகத் தான் அதிமுக கூட்டணிக்கு 75 சட்டமன்ற உறுப்பினர்களைத் தந்துள்ளார்கள்.

100 நாட்களில் உங்கள் அரசினுடைய செயல்பாடுகளை துல்லியமாக அளவீடு செய்யக் கூடிய தகுதி எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, கடந்த கால ஆட்சியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளில் திமுக அரசின் கவனம் திசை திரும்பி இருக்கிறது என்ற அச்சம் எல்லோர்க்கும் ஏற்பட்டு இருக்கிறது.பொருளாதார மீட்டெடுப்பு நடவடிக்கைள், மக்கள் வாழ்வாதார நடவடிக்கைகள், விஷம் போல் விண்ணை முட்டுகிற அளவிற்கு ஏறிக் கொண்டு இருக்கிற விலைவாசியைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கைகளில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.கடந்த அரசு இதை செய்ததா? அதை செய்ததா? என விவாதம் நடத்துவதற்குப் பதிலாக நாங்கள் இதைச் சொன்னோம்; இதைச் செய்தோம் எனச் சொல்வீர்களானால், மக்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் எதைச் சொன்னாலும் அது அம்பலத்தில் ஏறும்; ஏழைச் சொல் அம்பலம் ஏறாது என்பது போல எதிர்க்கட்சிகளின் சொல் இன்றைக்கு அம்பலத்தில் ஏறவில்லை.எங்கள் மீது நீங்கள் சொல்லும் புகார்களுக்குத் தகுந்த பதில்களைச் சொல்வதற்கு, சட்டமன்றத்திலே எங்களுக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும். எங்கள் பக்கம் தர்மமும் நியாமும் இருக்கிறது. எங்கள் அரசு இந்த நாட்டு மக்களுக்காகப் பல்வேறு சேவைகளை செய்து இருக்கிறது.51 ஆண்டு காலங்களில் ஏற்படாத வளர்ச்சி, கடந்த ஐந்தாண்டு கால அதிமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் ஏற்பட்டு இருக்கிறது. அதனால்தான் , திமுகவின் கோயாபல்ஸ் பிரச்சாரத்தையும் தாண்டி மதுரை மாவட்டத்தின் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அதிமுக வெற்றிப் பெற்றது. பல தொகுதிகளில் வெற்றிப் பெறக் கூடிய சூழ்நிலை இருந்தும், திமுகவின் கோயாபல்ஸ் பிரச்சாரத்தால் தவற விடப்பட்டு இருக்கிறது.திமுக அமைச்சர்கள் வாய் சொல் வீரர்களாக இருப்பதை விட்டு விட்டு, மக்கள் நலன் சார்ந்த பணிகளில் கவனத்தை திமுக அரசு செலுத்தினால் அது மக்களுக்கும் நாட்டுக்கும் நல்லது”, என ஆர்.பி. உதயகுமார், எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உதவிக்கரம் நீட்டுங்கள்..