மதுரையில் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு மையம், தேர்வு மதிப்பீட்டு மையத்தை அமைக்க கோரிய வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க மதுரை கிளை உத்தரவு.

மதுரையில் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு மையம் மற்றும் தேர்வு மதிப்பீட்டு மையத்தை அமைக்கவும், தென்காசி மாவட்டம் புளியங்குடியில் COA (Computer of Automation) தேர்வுக்கான தேர்வு மையத்தை அமைக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய மதுரைக்கிளை உத்தரவு.சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு மையம் மற்றும் தேர்வு மதிப்பீட்டு மையத்தை மதுரை, கோயம்புத்தூர் பகுதிகளில் ஏன் அமைக்கக்கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தமிழ்நாடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து கணினி மைய சங்கத்தின் தலைவர் சோமு சங்கர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “தமிழகத்தில் 3500க்கும் அதிகமான தனியார் தட்டச்சு மையங்கள் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றன. சுருக்கெழுத்து பயிற்சியை அவரவர் பகுதிகளிலேயே பெற்றுக் கொண்டாலும், தேர்வு எழுதுவதற்கு சென்னை தரமணி செல்லவேண்டியுள்ளது இதே போல தென்காசி மாவட்டத்தில் பல மாணவர்கள் Computer on Office Automation Course படிப்பை முடித்துவிட்டு தென்காசி மாவட்டத்தில், தேர்வு மையங்கள் இல்லாத காரணத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவற்றைக் கருத்தில்கொண்டு தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களின் நலன் கருதி மதுரையில் சுருக்கெழுத்து உயர்வேக தேர்வு மையம் மற்றும் தேர்வு விடைத்தாள் மதிப்பீடு மையத்தையும், தென்காசி மாவட்டம் கடையநல்லூர், சிவகிரி, வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையில் புளியங்குடி பகுதியில் கம்ப்யூட்டர் ஆன் ஆட்டோமேஷன் படிப்பிற்கான தேர்வு மையத்தை அமைக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.இந்த மனு சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் ஏன் மையங்கள் அமைக்கக் கூடாது. இதன் மூலம் தெற்கு தமிழ்நாடு மற்றும் மேற்கு தமிழ்நாட்டு பகுதியில் உள்ள மக்கள் பயன்பெற முடியும் எனக் கூறி வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்