
மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம் என தமிழக அரசுத்தரப்பில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுரை ஏய்ம்ஸ் மருத்துவமனை தற்காலிகமான இடத்தில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு, மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்க கோரிய வழக்கில் மதுரை எய்ம்ஸ் சம்பந்தமாக ஜூலை 16ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பதில் மனுவாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு மதுரைக்கிளை உத்தரவிட்டது.மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், “இந்தியாவில் 22 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றது. இதில், 2018 ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்தியாவில் புதிதாக அமைய உள்ள 16 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் பல மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.எனவே, மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான “ப்ராஜெக்ட் செல்”லை உருவாக்கி அதில் இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், இணை இயக்குனர், நிர்வாக அதிகாரி உட்பட பலரை நியமனம் செய்து தற்காலிக இடத்தை உருவாக்கி வெளிப்புற நோயாளிகள் துறை மற்றும் எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுத்தரப்பில், மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக உள்ளோம். மேலும் “தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை ஜூலை 9ஆம் தேதி சந்திக்கவுள்ளார். அன்று மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரம் குறித்தும் பேசப்படும்”என தெரிவித்தார்.தொடர்ந்து மாணவர் சேர்க்கை மற்றும் தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவதற்கான, மத்திய அரசின் பரிந்துரைகள் குறித்து முடிவெடுப்பதற்காக கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டது.அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மருத்துவ மாணவர் சேர்க்கை, தற்காலிக வெளிப்புற நோயாளிகள் பிரிவை உருவாக்குவது குறித்து எடுக்கப்படும் முடிவை பதில்மனுவாகத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
You must be logged in to post a comment.