சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாக வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

மதுரை சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த 29 வயதான இளைஞர் முத்துசாலை. இவர் அப்பகுதியில் ஆட்டோ மற்றும் தனியார் வாடகை வாகன ஓட்டுநராக வேலை பார்த்து வந்துள்ளார். முத்துச்சாலைக்கு திருமணமாகி 5 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வீடு புகுந்து பயங்கர ஆயுதங்களால் அவரை கொடூரமாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயங்களுடன் முத்துச்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முத்துச்சாலையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் கொடுத்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முத்துச்சாலையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிலைமான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இறந்த முத்துச்சாலை மீது கொலை வழக்கு நிலுவையில் இருப்பதால் முன்விரோதம் காரணமா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் வீடு புகுந்து இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மதுரை மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்