Home செய்திகள் மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் – நடிகை ரோகிணி

மோடியின் வேண்டுதலை மீனாட்சி அம்மன் நிறைவேற்றமாட்டார் – நடிகை ரோகிணி

by mohan

தமிழ், தமிழர் என்று பேசிவிட்டு அவர்களுக்கு எதிராகச் செயல்படும் நரேந்திர மோடியின் வேண்டுதலை மதுரை மீனாட்சி நிறைவேற்றமாட்டார். பொதுமக்களின் வேண்டுதலுக்குதான் செவி மடுப்பார்’ என்று நடிகை ரோகிணி மதுரையில் பேச்சு.திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் சார்பாக திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் பொன்னுத்தாயை ஆதரித்து, திரைப்பட நடிகை ரோகிணி, நாகமலைப் புதுக்கோட்டையில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது பேசிய அவர், ‘இவர்கள் கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை, நமது குழந்தைகளின் மீதான அச்சுறுத்தல். எட்டுவழிச் சாலை கொண்டு வந்தார்கள். அது நமது உழவர்களின் நிலங்களை அபகரிக்கும் திட்டம். சுத்தமான காற்று வேண்டும் என்று நூறு நாட்கள் அமைதியாகப் போராடிய மக்களில் 13 பேரை சுற்றுக் கொன்றார்கள். இவை அனைத்திற்கும் எதிராக நாம் குரல் கொடுத்து வருகிறோம்.

நமது வேளாண்மைக்கு மிகப் பெரிய ஆபத்தைத் தரும் வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார்கள். இவற்றிற்காக நாம் போராடிக் கொண்டிருக்கும்போது தேர்தல் வந்துவிட்டது. மேற்கண்ட திட்டங்களையெல்லாம் கொண்டு வந்த அதிமுக அரசையும், மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசையும் தோற்கடிக்க நாம் உறுதி பூண வேண்டும்.நகர்ப்பேருந்துகளில் பெண்கள் இலவசமாய்ப் பயணம் மேற்கொள்ள வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்கள் மற்றும் விவசாயிகள் வாங்கிய கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்வதாக திமுக அறிவித்துள்ளது. அதேபோன்று கேஸ் சிலிண்டரின் விலை ரூ.100 மானியம் வழங்குவதாகவும், பெட்ரோல், டீசல் விலையில் லிட்டர் ரூ.4 தள்ளுபடி செய்யவும் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

அதிகாரத்தில் இருந்த அதிமுக அரசு, கரோனா காலத்தில் கேஸ் சிலிண்டர் விலையைக் குறைந்தபட்சம் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஆனால் அதைச் செய்யாமல் தற்போது இலவச சிலிண்டர் என்று அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது. நாகமலை பகுதியில் இதுவரை பாதாள சாக்கடை அமைத்துத் தரவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுவரை பொறுப்பிலிருந்தவர்கள் என்ன செய்தார்கள்..? எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் போவதாக கூறியிருக்கிறார்கள். அப்படியென்றால் இதற்கு முன்பாக இருந்த செங்கல் அனைத்தும் வீணாகிவிட்டதா?முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்காத நீட் தேர்வை, தற்போதைய அதிமுக ஆட்சியாளர்களே கொண்டு வந்தனர். இதனால் அனிதாவை இழந்தோம். தற்போது நர்சிங் படிப்பிற்கும், கலை அறிவியல் படிப்பிற்கும் நீட் தேர்வு கொண்டு வந்துள்ளனர். அதேபோன்று பள்ளிப்படிப்புகளிலும் நுழைவுத் தேர்வு என குழந்தைகளை அல்லல்படுத்துகிற கல்விக் கொள்கையை இவர்கள் கொண்டு வந்துள்ளனர்.

தமிழகத்தின் வேலைவாய்ப்புகளை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு இந்த ஆட்சியாளர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இங்கே குடியிருப்புகளும் கட்டித்தர பாஜக உறுதியளித்துள்ளது. இந்தியாவில் 16 மாநிலங்களில் பாஜகவின் அரசு உள்ளன. ஆனால், அங்கெல்லாம் பிற மாநில மக்களுக்கு வீடு கட்டித்தருவோம் என்று சொல்லாமல், தமிழகத்தில் மட்டும் உறுதியளிப்பதன் காரணம் என்ன..? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த பதிலடியை இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக மக்கள் வழங்க வேண்டும்.தமிழக அரசின் வேலைவாய்ப்பில் நமது இளைஞர்களுக்கு 75 சதவிகிதம் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசில் காலியாக உள்ள 3.5 பணியிடங்களை நிரப்புவேன் எனவும் உறுதியளித்துள்ளார். தமிழக மின் வாரியம், வங்கிகள், ரயில்வே பணியிடங்களில் ஒரு தமிழரைக்கூட பணியில் அமர்த்தவில்லை. இவை அனைத்தையும் கேள்வி கேட்க வேண்டிய ஒரு காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

தமிழ், தமிழர்கள் என்றெல்லாம் பேசிவிட்டு தமிழ் மொழிக்கும், தமிழர்களுக்கும் எதிராக மோடி செயல்படுகிறார். இவ்வளவையும் செய்துவிட்டு மதுரை மீனாட்சி கோவிலில் அம்மனை வேண்டி வழிபாடு செய்கிறார். ஆனால் மதுரை மீனாட்சி மோடியின் வேண்டுகோளை ஏற்கமாட்டார். பொதுமக்களின் வேண்டுதலைதான் ஏற்பார். இங்கு வெற்றிவேல், வீரவேல் என்று முழக்கம்போடும் பாஜக, வடநாட்டில் இதைச் சொல்லட்டும் பார்க்கலாம்.பொன்னுத்தாய் போன்ற களப் போராளிகளை வெற்றி பெற வைத்து தமிழக சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். மக்களின் குரலுக்கு உடனடியாக ஓடிவந்து பணியாற்றக்கூடியவர்’ என்றார்

. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!