தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எங்களது மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அதன் மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கூறுகையில்,வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்தோம் என்றால், எங்கள் கட்சிக்கு தனிச் சின்னம் வேண்டும். ஒன்று இரண்டு தொகுதிகள் ஒதுக்கினால் நிற்க மாட்டோம்.வருகிற தேர்தலில் அனைத்துக் கட்சிகளும் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுகிறார்கள். யாரும் தனித்துப் போட்டியிடுவது இல்லை.ஒவ்வொரு கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, வெற்றி விகித்தாச்சார அடிப்படையில் ஆட்சி அமைக்கலாம் என யோசனை தெரிவித்தவன் நான். ஆதலால் கூட்டணி அமைத்து தேர்தல் களம் காணும் போது, மூன்றாவது கூட்டணி அமைந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் தயார்தான்.தேர்தலில் நிற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், எங்களது மகளிர் அணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார்.கடந்த ஆண்டு கொரோனா மக்களின் பொருளாதார சூழ்நிலையைப் பாதித்து இருக்கிறது. தேர்தலில் பணம் வாங்கி ஓட்டளிக்காமல் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவரை அதிலும் வல்லவரை தேர்ந்து எடுக்க வேண்டும்.திமுக தலைவர் நேரில் கண்டாலே பேச மாட்டார். ஆதலால் திமுக கூட்டணிப் பற்றிய சிந்தனை எங்களுக்கு இல்லை.சசிகலா வந்து அவரது நிலைப்பாட்டை தெரிவிக்கட்டும். அவர் குறித்து பின்னர் பார்க்கலாம்எனப் பேட்டி அளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்